பொது வாழ்க்கையில் கவனம் செலுத்தும் விஜய்

 

நடிகர் விஜய் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக விஜய் மக்கள் இயக்கத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு, சிறப்பு பரிசுகளை வழங்கி உதவிகள் செய்ததிலிருந்து தொடர்ந்து மக்களை நோக்கி விஜய் நேரடியாக நகர்ந்து வருகிறார். சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பொழுது கூட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை மக்கள் பணி செய்ய நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார். சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை மற்றும் நிவாரண உதவிகள் கொடுப்பதில் தொடங்கி, கனிமொழி, சீமான், அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வரை தனது சினிமா ஷெடுல்களுக்கு , மத்தியில் பொது வாழ்க்கையிலும் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்.

 

 ஈழப் பிரச்சினையில் தொடங்கி உள்ளாட்சித் தேர்தல் வரை

 


2009 இல் இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பது தொடங்கி, நீட் தேர்வால் அனிதா மரணம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு என அவ்வப்போது மக்கள் பிரச்சினைகளுக்கு நேரடியாக களத்தில் இறங்கி ஆதரவு தெரிவித்து வருகிறார். முதல்முறையாக நடைபெற்ற முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் பெயரை பயன்படுத்தி, போட்டியிட அனுமதி அளித்தார். அனுமதி வந்தது தான் தாமதம் பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் களம் காண துவங்கிவிட்டனர். சுமார் 120 விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி அடைந்தனர். இந்த வெற்றி கொடுத்த தென்பில் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை பூத் கமிட்டி வரை ஆட்களை நியமிக்க உத்தரவு பறந்தது.

 



விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு,  பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் 150 மாவட்ட நிர்வாகிகளை விஜய் நேரடியாக சந்தித்தார்.  இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி துவங்குதல் தொடர்பான ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  குறிப்பாக அரசியல் கட்சியை பதிவு செய்வது குறித்து இந்த கூட்டத்தில்  ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள்  வெளியாகி இருந்தது. பூத் கமிட்டிகளை வலுப்படுத்த விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளார். மக்கள் இயக்கத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் தலைமையையும் அடிமட்ட தொண்டரையும் இணைக்கும் வகையில் இயக்கத்தின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். 



எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கவேண்டும். மக்கள் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மக்கள் பணிகளை செய்ய தடை ஏற்பட்டால் உடனடியாக தலைமைக்கு தெரிவிக்க வேண்டும். வெகு விரைவில் அரசியல் கட்சியாகாக மாற இருப்பதாகவும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  நீங்கள்  மன்னர்கள்,  நீங்கள் சொல்வதைக் கேட்கக் கூடிய தளபதி என அவர் சூசகமாக பேசியதாக வெளியாகி உள்ள தகவல் அவர் அரசியல் வருகையை தான் குறிக்கிறது என அரசியல் விமர்சனங்கள் தெரிவிக்கின்றனர்.


 அரசியல் ஆலோசகரை நியமித்த விஜய்



அரசியல் கட்சி துவங்க இருப்பதால் அரசியல் கட்சிக்கு பெயர் என்ன என்பது குறித்தும் விஜய் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தனி குழுவை ஒன்று அமைத்துள்ளார். அரசியல் கட்சி துவங்கினால் அதில் கண்டிப்பாக மக்கள் என்ற வார்த்தை இருக்கும் எனவும் விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.



 சில நாட்களில் அறிவிப்பு வெளியாகிறதா ?


அரசியல் கட்சி  துவங்குவது குறித்தும்  தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என  தகவல் வெளியாகி உள்ளது.  விஜய் அரசியல் கட்சி துவங்கும் குறித்த தகவல்கள் வெளியாக துவங்கியதிலிருந்து,  விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சமூக வலைதளங்களில்  ஆதரவாக கருத்துகளை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக  விஜய் அரசியல் கட்சி துவங்கினால் அடுத்த சில நாட்களிலேயே,  உறுப்பினர்களை சேர்க்கவும்  அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  விஜய் தன்னுடைய அரசியல் கட்சிக்கு ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.