மாநிலங்களவை நியமன எம்.பியாக இசைஞானி இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில், ABP நாடு செய்தியாளர் கதிரவன் இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனை போனில் தொடர்பு கொண்டு அவருக்கு எம்பி பதவி கொடுத்தது குறித்து கேட்டறிந்தார். அந்த ஆடியோ உரையாடலாக பின்வருமாறு :


செய்தியாளர் கதிரவன் : சார், வணக்கம் இசைஞானி இளையராஜா சார எம்பியா தேர்ந்தெடுத்து இருக்காங்க அதை பத்தி என்ன நினைக்குறீங்க..? 


கங்கை அமரன் : எங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும்ன்னு நீங்களே நினைச்சி பாருங்க. கூட பிறந்த அண்ணாவுக்கு, அவர் கூடவே வாழ்ந்து வந்தவருக்கு இவ்வளவு பெரிய உயர் பதவியை மோடி ஜி கொடுத்திருப்பது சந்தோஷமா இருக்கு. மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கொண்டிருக்கிறோம். 


செய்தியாளர் கதிரவன் : எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்ட பின் இளையராஜாவிடம் பேசினீர்களா? என்ன சொன்னாங்க? 


கங்கை அமரன் : பேசினேன்.அவர் பெரிதாக ரியாக்ட் பண்ணமாட்டாரு.அப்படியா..சொன்னாங்களா? என மட்டுமே சொல்வாரு. அவர் வேற லெவலில் இருக்கிறாரு. எது கொடுத்தாலும் இறைவனின் செயல் நினைக்கும் அவருக்கு எப்போதும் நல்லதாவே நடக்கும்.


செய்தியாளர் கதிரவன் : பண்ணைபுரம் தொடங்கிய பயணம் பாராளுமன்றம் வரை நீண்டுள்ளது. இளையராஜா சகோதரரா இதை எப்படி பார்க்கிறீர்கள்? 


கங்கை அமரன் : கீழே இருந்து மேல வரைக்கும் அண்ணாந்து பார்க்கிறோம். அவ்வளவு பிரமிப்பாக உள்ளது. மோடி அவர்களுக்கு தான் நாங்கள் கோடான கோடி நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். மோடியின் வேண்டுதலாலும், தூண்டுதலாலும் தான் எம்.பி.பதவி கிடைத்துள்ளது.  முதலில் அண்ணன் மறுத்தார். பின் மோடியின் அன்பான வேண்டுகோளை தட்ட முடியாமல் சரி நீங்கள் என்ன பண்ணாலும் ஓ.கே. என கூறினார். அப்புறம் தான் அறிவிச்சாங்க...


செய்தியாளர் கதிரவன் : பண் இசைத்த குரல் பாராளுமன்ற குரலாக ஒலிக்கப்போகுது. அவருடைய கோரிக்கை எது சார்ந்ததாக இருக்கும்?


கங்கை அமரன் : கலாச்சாரம் சார்ந்ததாக இருக்கும். அவர் எதன் மூலமாக மக்களை ஆனந்தப்படுத்தினாரோ அதற்கு முக்கியத்துவம் இருக்கும். அதே நேரத்தில் கலாச்சாரம் விட்டுப்போகாமல் தடுக்கி கொண்டிருக்கும் விஷயங்கள் சார்ந்ததாக இருக்கும்.குறிப்பா சொல்லணும்னா இப்படி ஒரு பேச்சுவார்த்தை நடக்கையில் நாங்கள் மூகாம்பிகை கோவிலுக்கு போய்ட்டு வந்தோம். நல்லது நடக்கணும்ன்னு வேண்டிட்டு வந்தோம். அது போன்ற நம்பிக்கையை மக்களுக்கும் ஊட்டணும்ன்னு தான் ஆசை. யாரும் மனுஷங்களை நம்பவே வேண்டாம். தெய்வத்தை நம்பினோம். அதனால் தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். இது தெய்வத்தின் அரவணைப்பு..ஆசீர்வாதம் தான்....


செய்தியாளர் கதிரவன் : ஆரம்பத்துல எம்.பி. பதவியை மறுத்தாக சொன்னீர்களே...அவரின் நிலை தான் என்ன?


கங்கை அமரன் : மறுக்கல...மறுக்கல...முதல்ல இப்படி பதவி வந்தால் என்ன பண்ணுவீர்கள் என கேட்டதற்கு அதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது என கூறினார். ஆனால் அன்பான இடத்தில் இருந்து அழைப்பு வந்தவுடன் அதனை தட்ட முடியவில்லை. ரொம்ப சந்தோஷமா இருக்காது. 


செய்தியாளர் கதிரவன் : அதற்கு முன்னாடியே இளையராஜா மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்டு புகழ்ந்து பேசினது கவனம் பெற்றதே? 


கங்கை அமரன் : அதையும் இதையும் ஒப்பிடாதீர்கள். நல்லது நடந்தா அதை மட்டும் பாராட்டுங்கள். இதுக்காக இருக்குமோ என  காரணத்தை யோசிக்காதீர்கள்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண