தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசலுக்கு எப்போதுமே பஞ்சம் இருந்தது கிடையாது. யார் தலைவராக இருந்தாலும், அவரை நீக்கக் கோரி இன்னொரு கோஷ்டியினர் டெல்லிக்கு செல்வது ஆண்டாண்டு காலம் வழக்கம். பண்ணையார் கட்சி, தலைவர்களை மட்டுமே கொண்ட கட்சி என்ற விமர்சனங்களும் காங்கிரஸ் கட்சி மீது உண்டு. அதை உடைப்பதற்கோ, அடுத்தக் கட்ட வளர்ச்சியை ஏற்படுத்திக்கொள்ளவே இதுவரை பெரிதாக எந்த தலைவர்களும் தமிழ்நாட்டில் மெனக்கிட்டது இல்லை. அப்படி காங்கிரசை வளர்த்தெடுக்க நினைத்தால், அவர்கள் தொடர்ந்து அந்த கட்சி பதவியில் நீடிக்க முடியாத படி, பிற தலைவர்கள் கட்டம் கட்டுவார்கள்.

Continues below advertisement

செல்வபெருந்தகை, TNCC

செல்வபெருந்தகையை மாற்ற துடிக்கும் ‘பண்ணையார்கள்’

இப்போதும் அது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், முன்னரை விட இன்னும் வீரியமாக. தற்போதைய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகையை அந்த பதவியில் இருந்த நீக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்னர் அணி, அணியாக டெல்லி சென்ற தலைவர்கள் எல்லாம் போன வேகத்திலேயே மீண்டும் தமிழ்நாடு திரும்பி வந்தனர். இப்போது அந்த அணிகளில் கூடுதலாக மற்ற கோஷ்டியினரும் இணைந்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கு தற்போதைய பொது எதிரியாக மாறியிருக்கிறார் செல்வபெருந்தகை. தேர்தல் சமயம் என்பதால், அவரை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்று கங்கனம்கட்டிக்கொண்டு அவர் மீது அடுக்கடுக்கான புகார்களை டெல்லி தலைமைக்கு அனுப்பி வருகின்றனர்.

Continues below advertisement

மூன்று எம்.பிக்களின் சதுரங்க ஆட்டம்

’எதிரிக்கு எதிரி, நண்பன்’ என்ற கணக்கில் செல்வபெருந்தகைக்கு எதிராக பல கோஷ்டிகள் தற்போது ஒன்றிணைந்திருக்கிறது. குறிப்பாக, மூன்று எம்.பிக்கள், ஒரு எம்.எல்.ஏ என இந்த கோஷ்டியில் ஐக்கியம் ஆகி, செல்வபெருந்தகைக்கு எதிராக சிண்டு முடியத் தொடங்கியிருக்கிறார் என்கிறார்கள் கதர் சட்டைக்காரர்கள்.

அழகிரி தலைவராக இருக்கும்போது ஏன் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை?

சமீபத்தில், திமுக கூட்டணியில் அதிக சீட் கேட்டு பெறுவோம் என்றும் ஆட்சியில் பங்கு கேட்போம் என்றும் கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ ராஜேஸ்குமார் பேசியதும் இதன் பின்னணியில்தான். வெளிப்படையாக பார்த்தால் அழகிரி, ராஜேஸ்குமார் போன்றோர் பேசுவது சரிதானே? என்றும் தோன்றும். ஆனால், அவர்களுடைய உண்மையான நோக்கம் அதிக தொகுதிகள் பெறுவதோ, ஆட்சியில் பங்கு பெறுவதோ அல்ல. வரும் தேர்தலில் தங்களது ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதும் அதற்கு கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி செல்வபெருந்தைகையை தலைவர் பதவியை விட்டு நீக்க வைப்பதும்தான் என்பது சத்தியமூர்த்திபவன் வாசலில் சஞ்சரிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். உண்மையிலேயே, ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி நினைத்திருந்தால், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பொறுப்பு வகித்தப்போதே கேட்டிருக்கலாமே?

பட்டியலினத்தவர் தலைவராக இருப்பதை விரும்பாத ‘பூர்ஷ்வாக்கள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை கக்கன், மரகதம் சந்திரசேகர், இளையபெருமாள் ஆகியோருக்கு பின்னர், பல ஆண்டுகளுக்கு பிறகு, கமிட்டித் தலைவர் ஆகியிருக்கிறார் செல்வபெருந்தகை எனும் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர். தொடக்கம் முதல் இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல், ஆதிக்க மன நிலையில் இருந்த பண்ணையார்கள் பலர் அவருக்கு எதிராகவே செயல்பட்டு வந்தனர். அவர் சொல்வதை கேட்காமல், அறிவிப்புகளை மதிக்காமல் இருந்து வந்தனர். தேசிய காங்கிரஸ் தலைவர் கண்டித்த பின்னர், வேறு வழியின்றி செல்வபெருந்தகை சொல்வதை கேட்கத் தொடங்கினார். ஆனால், எப்படியாவது அவரை மாற்றிவிடவேண்டும் என்பதை மாற்றும் அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை.

செல்வபெருந்தகையை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வைத்து செல்வபெருந்தகையை விமர்சனம் செய்ய வைத்திருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர்கள். இவ்வளவு நாட்களாக தொடர்ந்து பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி, இத்தனை நாட்கள் செல்வபெருந்தகையை கடுமையான வார்த்தைகள் விமர்சனம் செய்யாமல், இப்போது திடீரென அவரை பிச்சைக்காரோடு ஒப்பிட்டு விமர்சித்துள்ளதே அதற்கு சான்று என்பது விவரம் அறிந்தவர்கள் கூறுவது.  திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பிரிந்து, அதிமுக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற கணக்கு போட்டவர்களின் உள்ளடி வேலைதான் இது என்பதும், செல்வபெருந்தகை தலைவர் பதவியில் இருக்கும் வரை திமுக கூட்டணி பலமாக இருக்கும் என்பதையும் கணித்த சாணக்கிய வேடம் தரித்தவர்களின் தரிகிட ஆட்டம்தான் இது.

செல்வபெருந்தைகை மீது ஏன் இந்த வன்மம்?

செல்வபெருந்தகை மீது விமர்சனங்கள் எழாமல் இல்லை. மற்ற காங்கிரஸ் தலைவர்களைபோல அவர் மீது குறைகள் இருக்கின்றன. ஆனால், அவரின் மீதும் அவரின் செயல்பாடுகள் மூலமும் கடும் கோபம் அடைந்திருக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தற்போது அதை வன்மமாக கக்கக் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு காரணமும் உண்டு. பல ஆண்டுகளாக காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான சொத்துகளை வடநாட்டை சேர்ந்த நபர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு இருந்தார்கள். கடந்த கால தலைவர்கள் அந்த நிலங்களை மீட்பதற்கு நடவடிக்கைகளை பெரிதாக எடுக்கவில்லை. அப்படி நடவடிக்கை எடுப்பதாக காட்டினாலும் பல சமரத்திற்கு உட்பட்டு அதனை அவர்களால் செய்ய முடியவில்லை. ஆனால், செல்வபெருந்தகை எந்த சமரசமும் செய்யாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மீட்டிருக்கிறார்.

அதே நேரத்தில், கடந்த எம்.பி. தேர்தலில், சீட் வாங்கித் தருவதாக கூறி தென்மாவட்டத்தை சேர்ந்த டெல்லியில் லாபி செய்யும் ஒரு முக்கிய பிரமுகர் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டியிருக்கிறார். இந்த தகவலை அறிந்த செல்வபெருந்தகை அவர் தேர்வு செய்த நபர்களுக்கு எம்.பி. சீட் கிடைக்காமல் பார்த்துக்கொண்டார். அது அந்த தலைவரை உஷ்ணத்திற்கு கொண்டுச் சென்றது. மேலும், யாருமே எதிர்பாராமல் மயிலாடுதுறையில் சுதா என்ற கட்சியின் சாதாரண நிர்வாகியை வேட்பாளராக நிறுத்தி, அவருக்கான உதவிகளை செய்து அவரை எம்.பியாக்கினார். கடலூரில் எம்.பி-யாகிவிட வேண்டும் என்று சீட்டிற்கு மெனக்கிட்ட முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு பதில் விஷ்ணுபிரசாத்திற்கு பரிந்துரை செய்தார் செல்வபெருந்தகை. இப்படி அவர் செய்த விஷயங்களும் கோஷ்டியினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தின.

கையெழுத்துப்போடாத கே.சி.வேணுகோபால்

அதனால், காங்கிரஸ் கமிட்டிக்கு புத்துயிர் ஊட்டவும், தேர்தலை சந்திக்கவும்,  புதிய நிர்வாகிகளை நியமிக்க செல்வபெருந்தகை பரிந்துரைத்த பெயர் பட்டியலை கூட, லாபி செய்து பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபாலை கையெழுத்து போடவிடாமல் இவர்கள் தடுத்து வருகின்றனர்.

செல்வபெருந்தகை விரைவில் நீக்கம், செல்வபெருந்தகை ராஜினாமா, செல்வபெருந்தகை மீது ராகுல் கடும் அதிருப்தி என்பதுபோன்ற தகவல்களையும் ஊடகங்களுக்கு கசியவிட்டு, செல்வபெருந்தகையை மனதளவில் காயப்படுத்தி, அவரே ராஜினமா செய்துவிட்டு போகச் செய்யும் வழியிலும் முக்கியமான எம்.பி ஒருவர் செயல்பட்டு வருகிறார் என்கிறார்கள் சத்தியமூர்த்திபவன் கதர் சட்டைக் காரர்கள்.

செல்வபெருந்தகையை நீக்க முடியுமா..?

ஆனால், தேசிய காங்கிரஸ் சொன்ன அத்தனை அறிவுறுத்தல்களையும் தமிழ்நாட்டில் பின்பற்றி, கிராமம் தோறும் கூட்டங்கள் போட்டு காட்டியுள்ள செல்வபெருந்தகையை, இந்த கோஷ்டியினரால் இப்போதைக்கு பதவியை விட்டு நீக்க முடியாது என்றும், அவர் செய்யும் அனைத்து பணிகளையும் உடனுக்குடன் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்க்கேவிற்கு தெரியப்படுத்தி வருவதாலும், திமுக தலைமையும் செல்வபெருந்தகையை விரும்புவதாலும் தேர்தல் வரை செல்வபெருந்தகைதான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தொடருவார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்