Ladakh Protest: மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

போராட்டத்தில் வெடித்த வன்முறை...

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்குவதோடு, ஆறாவது அட்டவணையின் கீழும் சேர்கக் கோரி நடந்த போராட்டம் திங்கட்கிழமை அன்று வன்முறையாக வெடித்தது. இதில் குறைந்தபட்சம் 4 பேர் உயிரிழந்த நிலையில், 60 பேர் வரை காயமடைந்துள்ளனர். வன்முறையின் போது, உள்ளூர் பாஜக அலுவலகம் மற்றும் ஒரு வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டது. வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர். இதையடுத்து பதற்றத்தை தணிக்கும் வகையில், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. போராட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் குதித்த GEN Z...

லே அபெக்ஸ் பாடி (LAB) இன் இளைஞர் பிரிவால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டம், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கவும், அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்கப்படவும் கோரி நடைபெற்று வரும் பரப்புரையின் ஒரு பகுதியாகும். "லடாக்கின் நான்கு பிரச்சினைகள் குறித்து நாங்கள் நீண்ட காலமாக ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறோம். வன்முறைச் செயல்களுக்கு வழிவகுத்த சில சம்பவங்கள் நடந்தன. இந்த வன்முறையின் போது, ​​2-3 இளைஞர்கள் எங்கள் லட்சியத்திற்காக தியாகிகளாகியுள்ளனர். இந்த இளைஞர்கள் செய்த தியாகங்களை வீணாக்க விடமாட்டோம் என்று லடாக் மக்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்," என்று லடாக்கின் உச்ச அமைப்பின் தலைவர் துப்ஸ்தான் ஸ்வாங் தெரிவித்துள்ளார்.

”வேலையின்மையால் வெடித்த போராட்டம்”

மாநில அந்தஸ்தை வலியுறுத்தி செப்டம்பர் 10 முதல் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரில் இருவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை அடுத்து, முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட கல்வீச்சு தான், ஒட்டுமொத்த வன்முறைக்கும் காரணமாக கூறப்படுகிறது. இதனிடையே,  உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட கொண்ட வாங்சுக், தனது ஆதரவாளர்கள் வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், "கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வரும் எங்கள் அமைதியான போராட்டத்தை இந்த சம்பவம் சீர்குலைத்துள்ளது. GEN - Z இந்தப் போராட்டம் வேலையின்மை மற்றும் பிற பெரிய பிரச்சினைகளால் மட்டுமே ஏற்பட்டது. இன்றுGEN - Zன் வெறித்தனத்தைக் கண்டோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்களின் விரக்தியை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் அவர்களின் போராட்ட முறையை நான் கண்டிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

பாஜகவை கண்டிக்கும் ஒமர் அப்துல்லா...

வன்முறை தொடர்பாக பேசிய ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, “தேர்தல் செயல்பாட்டில் எங்கள் மக்கள் பங்கேற்றனர். வெற்றி பெற முடியாமல் போனது பாஜகவின் துரதிர்ஷ்டம். இருப்பினும், இங்குள்ள மக்களை அதற்காக தண்டிக்க கூடாது. பாஜக அரசாங்கத்தை அமைக்காததால் மக்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இது மக்களுக்கு அநீதியானது. முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும்போது மட்டுமே மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என்று கூறவில்லையே. மாநில அந்தஸ்துக்கு பாஜகவிடமிருந்து எதிர்ப்பு வருகிறது” என சாடியுள்ளார்.

அன்று கொண்டாட்டம்.. இன்று திண்டாட்டம்..

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒரு அங்கமாக இருந்த லடாக், கடந்த ஆகஸ்ட் 5, 2019 அன்று பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்த, யூனியன் பிரதேசமாக மாறியது. இந்த நடவடிக்கையை அப்போது கொண்டாடிய லடாக் மக்கள், இப்போது மாநில அந்தஸ்தை கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது வளர்ச்சிக்கும், இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து அவசியம் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். போதிய வேலைவாய்ப்புகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் இல்லாததன் அதிருப்தியின் விளைவாகவே தற்போது அங்கு இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதேபோன்று இளைஞர்களால் ஏற்பட்ட வன்முறையால் தான் அண்மையில், நேபாளத்தில் ஆட்சிமாற்றமேற்பட்டது குறிப்பிடத்தக்கது.