சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனும் காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியும் திருப்பத்தூரில் அமைச்சர் பெரியகருப்பனும், மானாமதுரை தனித் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சராக இருந்த தமிழரசியும் வெற்றி பெற்றுள்ளனர்.
18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடியும் ஒருவர். கடந்த 2019ஆம் ஆண்டு மானமதுரை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாகராஜன் வெற்றி பெற்றிருந்தார். அமமுக வேட்பாளராக களமிறக்கப்பட்ட மாரியப்பன் கென்னடி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் கனிமொழியின் ஆதரவாளராக இருந்து வரும் முன்னாள் அமைச்சர் தமிழரசியும் அதிமுக சார்பில் நாகராஜனும், அமமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடியும். மக்கள் நீதி மய்யம் வேட்பாளாராக சிவசங்கரியும், நாம் தமிழர் கட்சி சார்பாக சத்தியப்பிரியாவும் போட்டியிட்டனர்.
இதில் தமிழரசி வெற்றி பெற்ற நிலையில், அமமுக சார்பில் போட்டியிட்டு தோற்ற மாரியப்பன் கென்னடி திமுகவில் இணைந்தார். நடந்து முடிந்த தேர்தலிலியே மானமதுரை தொகுதியில் தமிழரசி தோற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உடன்பிறப்புகள் சிலர் உள்குத்து வேலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து திருபுவனத்தை சேர்ந்த திமுகவினரிடம் பேசும்போது: மானாமதுரை அ.தி.மு.கவின் கோட்டையாக இருந்து வருகிறது. இதனை உடைக்கும் வகையில் தமிழரசி 15 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் கூடுதலாக பெற்று, வெற்றி பெற்றுள்ளார். இந்த சூழலில் தி.மு.க நிர்வாகிகளே அவருக்கு எதிராக செயல்படுகின்றனர். அவரை ஒடுக்க வேண்டும் என அமமுகவைச் சேர்ந்த வேட்பாளர் மாரியப்பன் கென்னடியை, திமுகவில் இணைய வைத்து முன்னிலைப்படுத்தி வருகின்றனர். எம்.எல்.ஏ தமிழரசியின் அரசுயில் வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்பது போல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
கட்சி மற்றும் பொதுநிகழ்ச்சிகளில் தமிழரசியின் அவரது புகைப்படங்களை கூட பயன்படுத்த கூடாது என்று கட்சி வட்டாரங்களுக்குள் தெரிவித்துள்ளனர். மணலூர் பிரசிரெண்ட் பொற்கோ மூலம் ஜாதி அரசியலையும் செய்கின்றனர். மணல் கடத்திலுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்ற கோபத்தில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் தி.மு.கவின் பெயரை கெடுத்து வருகிறார். அதே போல் மானாமதுரை நகர் செயலாளர் பொண்னுச்சாமி மற்றும் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஆகியோரும் மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் ஆலோசனைப்படி தமிழரசிக்கு எதிராக அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதற்கு தனி கூட்டம் நடத்தி மறைமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். எனவே இது தொடர்பாக 16 பக்க குற்றச்சாட்டுகளை இளையான்குடி பகுதியில் இருந்து தலைமைக்கு அனுப்ப உள்ளோம். மானாமதுரை தொகுதியை பெரும் போராட்டத்திற்கு பின் மீட்டுள்ளோம். எனவே மீண்டும் அ.தி.மு.க கைக்கு சென்றுவிடாமல் இருக்க தலைமை நடவடிக்கைகள் எடுக்கும் என நம்புகிறோம்” என்றனர். சிவகங்கை மாவட்ட தி.மு.கவில் சர்ச்சை கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - பழுப்புக் கீச்சான், உள்ளான், மஞ்சள் வாலாட்டி.. மதுரையில் நடைபெற்ற பறவை காணுதல் நிகழ்ச்சி!