இந்திய தேசிய காங்கிரஸ் (INC) யை இந்திய தேசிய சர்க்கஸ் என ஆம் ஆத்மி கட்சி செய்தித்தொடர்பாளர் ராகவ் சத்தா விமர்சித்து உள்ளார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த ராகவ் சத்தா, காங்கிரஸ் கட்சி பஞ்சாப் அரசாங்கத்தையும், பஞ்சாப் மாநில நிர்வாகத்தை சர்க்கஸ் காட்சி போல் மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
“பஞ்சாப் மாநில மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய நம்பிக்கையுடன் வாக்களித்தனர். பஞ்சாப் மாநிலத்தின் அகாலி தளம் கட்சி மற்றும் பாதல் குடும்பத்தினரின் ஊழலையும் மோசடியை ஒழிக்க பஞ்சாப் மக்கள் காங்கிரசை தேர்வு செய்தனர். ஆனால் இன்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தங்களுக்குள் மோதிக்கொள்கின்றனர். அவர்களுக்கு இடையேயான உட்கட்சிப் பூசல் மாநிலத்தை முழுவதுமாக சீரழித்துவிட்டது.” என சாடினார்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு பஞ்சாப் மக்களுக்கு அளித்த ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டிய ராகவ் சத்தா, இதுவரை மக்களுக்காக எந்த நல்ல திட்டத்தையும், நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார். ”பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசின் பதவிக்காலம் முடிவடைந்து தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் கூட அடுத்த முதலமைச்சர் யார் என சண்டையிட்டுக் கொள்கிறார்கள். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் அரசியல் அராஜகப் போக்கு பெருகிவிட்டது.” என அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய ராகவ் சத்தா, “தற்போது பஞ்சாப் மாநில மக்கள் ஆம் ஆத்மி கட்சி மீது நம்பிக்கை வைக்க தொடங்கி இருக்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சியால் மட்டுமே பஞ்சாப் மாநிலத்தில் நிலையான நல்ல அரசாங்கத்தை தர முடியும் என மக்கள் அதிகம் நம்புகின்றனர்.” என்றார்.
அதே நேரம் டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் 2 நாள் பயணமாக பஞ்சாபுக்கு சென்றார். அங்கு பேசிய கெஜ்ரிவால், 2022 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடைபெற இருக்கக் கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் வாக்களித்து வெற்றி அடைய செய்தால் அனைத்து மக்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அனைவருக்கு இலவச மருத்துவ வசதிகள் செய்து தரப்படும் எனவும் உறுதி அளித்தார்.
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்வதாக அறிவித்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். இதனை தொடர்ந்து பஞ்சாப் காங்கிரசில் நிலவும் உட்கட்சிப் பூசல் வெட்டவெளிச்சமாகியது.