வலதுசாரி, இடதுசாரி என பேசக் கூடியவர்கள் கூட ஆணவப் படுகொலையை பற்றி பேச மறுப்பது இந்த சமூகத்தின் மிகப்பெரிய துர்பாக்கியம் என வி.சி.க பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

 

வி.சி.க பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா

 

மதுரை மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் மணியரசுவின் மகள் திருமணவிழா தல்லாகுளம் பூங்கா முருகன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திருமண மேடையில் பேசியபோது...,” ஆதிக்க மனப்பான்மை தூக்கி எறியப்படக்கூடிய அரசியலை தான் நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆணவப்படுகொலை அதிகமாக நடக்கக்கூடிய ஒரு காலகட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். ஆணவப்படுகொலைக்கு எதிரான  விழிப்புணர்வு கல்வி நிலையங்களில் இருந்து உருவாக்கப்படவேண்டும். பள்ளிக் கல்வியிலிருந்து உருவாக்கப்பட வேண்டும், அதற்கான சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும். தலித் அரசியல் என்பது ஒரு சாதிய அரசியல்  அல்ல மனித இனத்திற்கான அரசியல் ; வலதுசாரி, இடதுசாரி என  பேசக் கூடியவர்கள் கூட ஆணவ படுகொலையை பற்றி பேச மறுப்பது இந்த சமூகத்தின் மிகப்பெரிய துர்பாக்கியம், இன்றைக்கு ஆணவ படுகொலை என்றாலே ஒரு கொலையுடன் முடிந்து விடுகிறது. அதிகாரம் எதற்கு  தலித் மக்கள், சிறுபான்மை மக்கள் இவர்களுக்கு அதிகாரம் எதற்கு இந்த அதிகாரம் ஊழல் செய்வதற்காக இல்லை, அதிகாரத்தினுடைய பலத்தை அனுபவிக்க கிடையாது. ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இன்றைக்கும் ஒரு சமமான சமநிலை உருவாக்க முடியவில்லை. கல்வி நிலையங்களில் தங்களுடைய ப்ரொபஷனல் எஜுகேஷன் சிஸ்டத்தில் தலித் மாணாக்கர்கள் பெரிதாக சாதிக்க முடியவில்லை. பிறப்பால் எல்லோரும் சமம் இல்லை என்கிறவர்களை கைது செய்து தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுக்கான விழிப்புணர்வுகளை உருவாக்க வேண்டும் அவர்களுக்கான கவுன்சிலிங் சிஸ்டத்தை உருவாக்க வேண்டும். மனநல மருத்துவர்களை கொண்டு ஒரு கவுன்சிலிங் சிஸ்டத்தை உருவாக்க வேண்டும்.

 

திருமாவளவனுடைய கனவுகள் கூடிய விரைவில் நிறைவேறும்

 

திருமாவளவனின் வலியுறுத்தலில் வந்திருக்கிறேன். எனக்கு பதவி வேண்டும் என்றால் பல பதவி உள்ளது. இந்த ஜாதி பெயரை சொல்லி கூப்பிடுவது யூ டியூபில் கத்துவது இதெயெல்லாம் 15 வயதில் அம்பேத்கர் பெரியார் புத்தகத்தை படிக்கும் போதே பாத்துட்டோம். அம்பேத்கரை போன்று  விமர்சனத்தை மேற்கொண்டவர்களை யாரும் பார்த்தது கிடையாது. திருமாவளவனை போலவும் விமர்சனத்தை எதிர்கொண்டது யாரும் கிடையாது. பிரச்னை வந்தால் பார்த்துக்கொள்ளலாம். பிரச்சனை வருவதை தான் எதிர்பார்க்கிறோம் பிரச்சனை வந்தால் தான் தீர்வு கிடைக்கும். அமைதியா பொறுமையா இருந்ததெல்லாம் போதும் அமைதியா ரொம்ப வருஷம் இருந்துட்டோம்,  பொறுமையாக இருந்து விட்டோம். எங்களுக்கும் பிரச்சாரத்தை உருவாக்க தெரியும் திருமாவளவனுடைய கனவுகள் கூடிய விரைவில் நிறைவேறும் எல்லா விதமான அதிகாரமும் சட்டமன்றத் தேர்தலில் நிறைவேற்றப்படும். ஆதிக்கதை ஒழிப்பதற்கு தான் பொறுமையையும் கல்வியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். கோபத்தில் வன்முறைக்கு பதிலாக கையில் பேனா எடுக்க அம்பேத்கர் கற்றுக் கொடுத்திருக்கிறார். கையில் பேனாவுடன் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறோம்” என்றார்.