கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புதிய கிளை திறப்பு விழா மற்றும் தொண்டர்கள் இணையும் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் மற்றும் நீண்ட நாட்கள் சிறைவாசம் அனுபவிப்பவர்களை  விடுதலை செய்ய வேண்டும் என  கேட்டு கொண்டார். 


தொடர்ந்து பேசிய கொளத்தூர் மணி,  திராவிட முன்னேற்ற கழகம் 161 என்ற அரசியல் சட்டப்பிரிவின் படி தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தில், ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என அமைச்சரவையில் தீர்மானம் செய்து அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். ஆனால் அதனை காலம் தாழ்த்தி வருகிறார்கள். இப்போது பல வழக்குகளில் கூறிய படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் ஒப்புதல் கொடுக்க வேண்டும், தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்க வேண்டும், தேவையில்லாமல் இழுத்தடிப்பது நியாயமல்ல எனக்கூறி இருக்கிறார்கள், எனவே இதற்கு பிறகாவது ஆளுநர் அவர்களும் அல்லது மத்திய உள்துறை அமைச்சகமும் அதற்கான அக்கறை எடுத்து செயல்படும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.



மேலும் நீண்டகால சிறைவாசிகள் ஏராளமானோர் இன்னும் சிறையில் வாடி கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய சிறைவாசிகள், வீரப்பனின் சகோதரர் மாதையன் அவரோடு சேர்ந்த பெருமாள் போன்றவர்கள் 33 ஆண்டுகள் சிறையில் உள்ளார்கள். வழக்கமான நடைமுறை என்னவென்றால் சிறை என்பது குற்றம் செய்து விட்டு தண்டிக்கப்பட்டவர்களை  நல்லவர்களாக மாற்றுவதற்காகத்தான், 30 ஆண்டுகள் கழித்தும் சிறைத்துறையால் அவர்களை வெளியே வரமுடியாத அளவிற்கு வைத்துள்ளார்கள் என்றால் சிறைத்துறை குறித்துதான் அரசு கவனிக்க வேண்டும், சிறைத்துறை நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டுமே தவிர சிறையாளிகளை மீண்டும் மீண்டும் சிறையில் வைத்து கொண்டிருப்பதில் எந்த நியாயமும் இல்லை என்றார்.



தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டு கொன்றவர்கள் கூட 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார்கள், ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நேரடியாக ஈடுபடாதவர்கள் உதவி செய்திருப்பார்கள் என கருதப்படுபவர்கள், நீண்ட நாட்களாக சிறைவாசம் அனுபவிப்பதில் எந்த நியாயமும் இல்லை, எனவே உடனடியாக 7 பேரை மட்டுமல்ல நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவிப்பவர்கள் அனைவரையும் தண்டனை பிரிவை கருத்தில் கொள்ளாமல் விடுதலை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.


மீண்டும் மாரிதாஸ் கைது...திண்டுக்கல் மாணவி இறப்பு - தென் மண்டலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்