காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வாகவுள்ளனர்.
காலியாக உள்ள இடங்கள்:
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலங்கள் முடிவடைய உள்ள நிலையில், அந்த இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் 6 இடங்கள் காலியாக இருந்த நிலையில் திமுகவிற்கு 4 பேரையும், அதிமுக 2 பேரையும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தது. இதனையடுத்து, திமுகவால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களான எஸ்.கல்யாணசுந்தரம், ஆா்.கிரிராஜன், கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் ஆகிய மூன்று பேரும் கடந்த 27-ஆம் தேதியன்று மனு தாக்கல் செய்தனா்.
அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மனுதாக்கல்:
அதேபோல அதிமுகவால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களான முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.தர்மர் மற்றும் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரான முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் கடந்த மே 30ஆம் தேதி அன்று தோ்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப் பேரவைச் செயலாளருமான கி.சீனிவாசனிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா். அதே நேரத்தில் இத்தேர்தலில் போட்டியிட 7 சுயேட்சை வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் மன்னன் பத்மராஜன் 230வது முறையாக தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார்.
வேட்புமனுக்கள் ஏற்பு:
வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து, வேட்பு மனு சரிபார்த்தல் தேர்தல் அதிகாரி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. முடிவில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது. ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக கூட்டணிக்கு 159 எம்.எல்.ஏ.க்களும், அதிமுக கூட்டணியில் 75 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் பாமகவின் 5 எம்எல்ஏக்களும், பாஜகவின் 4 எம்எல்ஏக்களும் அடக்கம். கூட்டணி கணக்குப்படி ராமதாஸை மாநிலங்களவை உறுப்பினராக்கிவிட்ட நிலையில், தற்போது நடைபெறும் தேர்தலுக்கு அதிமுகவிற்கு, பாஜகவும், பாமகவும் ஆதரவு தெரிவித்துள்ளன. காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சுயேட்சை மனுக்கள் தள்ளுபடி:
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், சுயேட்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுவில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழியாத காரணத்தால், மனு தாக்கல் செய்திருந்த தேர்தல் மன்னன் பத்மராஜா, வலம்புரி உள்ளிட்ட 7 பேரின் மனுக்கள் தேர்தல் அதிகாரியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.