Bihar SIR BJP: பீகாரில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் குறித்து, விவாதிக்காததற்கு மூன்று காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

விவாதத்திற்கு ”வாய்ப்பே இல்லை”

அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பீகாரில், தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. உரிய ஆவணங்கள் இல்லை, இடம்பெயர்வு மற்று மரணம் ஆகியவற்றை காரணங்களாக குறிப்பிட்டு, பல லட்சக் கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பாஜகவின் தேர்தல் லாபத்திற்காக உள்நோக்கத்துடன் இந்த பணியை தேர்தல் ஆணையம் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என ஒருவார காலமாக நாடாளுமன்றத்தையும் முடக்கி வருகின்றன. ஆனால், எதிர்க்கட்சிகள் தீவிரமாக வலியுறுத்தினாலும், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விவாதிக்காது என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு சொல்வது என்ன?

ஆப்ரேஷன் சிந்தூர் மீதான சிறப்பு விவாதம் முடிந்ததுமே, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளன. இதுகுறித்து பேசிய நாடா ளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, விதிகள் அனுமதித்து, சபாநாயகர் தயாராக இருந்து, அலுவல் ஆலோசனைக் குழுவில் முடிவு செய்யப்பட்டால், எந்த ஒரு தலைப்பிலும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதாகவோ அல்லது மறுப்பதாகவோ அரசு நேரடியாக தெரிவிக்காத நிலையில், மூன்று வாதங்களை அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் 3 காரணங்கள்:

  • இந்திய தேர்தல் ஆணையத்தால் முன்னெடுத்துள்ள பணி ஒரு தேர்தல் சீர்திருத்தம் அல்ல. இது ஒரு நிர்வாக நடவடிக்கை மற்றும் தேர்தல் ஆணையம் அவ்வப்போது அத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம்.
  • வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டாலும், எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு பதிலளிக்க யாரும் இல்லை.  தேர்தல் ஆணையம் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க சபைக்கு வர முடியாது. சட்ட அமைச்சகம் தேர்தல் ஆணையத்தின் முதன்மை அமைச்சகமாக இருந்தாலும், அது பொதுவாக நிர்வாகப் பணிகளை மட்டுமே கவனித்துக் கொள்கிறது, கொள்கை விஷயங்களில் தலையிடுவதில்லை.
  • நாடாளுமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க வழிமுறை இல்லாத இதுபோன்ற பல அமைப்புகள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலைகளில், அந்த அமைப்புகள் குறித்து விவாதம் நடத்த முடியாது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

அரசு சொல்லும் உதாரணம்:

முன்பு ஒரு முறை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, சபாநாயகர் எடுத்த முடிவை மத்திய அரசு உதாரணமாக காட்டுகிறது. அதன்படி, 1986 ஆம் ஆண்டில் அப்போதைய சபாநாயகர் பல்ராம் ஜாக்கர், விரிவான தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியும், ஆனால் நிர்வாக செயல்முறைகள் மற்றும் முடிவுகளைப் பற்றி விவாதிக்க முடியாது என்று கூறியிருந்தார். இந்தக் காரணங்களை காட்டி பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.