சேலம் மாவட்டம் எடப்பாடியில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியது, "திமுகவில் சர்வாதிகாரம் தலை தூக்கி நிற்கிறது. மன்னர் பரம்பரை போல திமுக செயல் படுகிறது. கருணாநிதி இருக்கும்போது 20 ஆண்டுகாலம் ஸ்டாலின் திமுகவிற்காக உழைத்தார். ஆனால் எந்த ஒரு முறையிலும் கட்சிக்காக பாடுபடாமல் கருணாநிதியின் குடும்பம் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வராக பட்டாபிஷேகம் செய்துள்ளனர். இது ஒருபோதும் எடுபடாது. தமிழக மக்கள் குடும்ப அரசியலை அனுமதிக்க மாட்டார்கள். 2026 இல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும். பல்வேறு நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலினை கலந்து கொள்ள வைத்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது அவர்கள் விழிப்புணர்வு கொண்டவர்கள். என்பதால் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வாரிசு அரசுக்கு முடிவு கட்டுவார்கள் என்றார்.



2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டு காலம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மக்கள் நலத்திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியது. இந்நிலையில் அவசர சிகிச்சையில் இருக்கும் நோயாளிக்கு வென்டிலேட்டர் வைப்பது போல சேலத்திற்கு திமுக சார்பில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆட்சி முடிவதற்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் போது அமைச்சர் பதவி வழங்கியதால் எந்த பயனும் இல்லை. சேலம் மாவட்டத்தில் திமுகவினர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக மக்களை சந்திக்காமல் தற்போது அமைச்சர் பதவி வந்தவுடன் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துகின்றனர். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அதிமுக ஆட்சியில் எடப்பாடிக்கு எதுவும் செய்யவில்லை என குறை கூறுகிறார். ஆனால் மக்கள் சந்திப்பு கூட்டங்களில், அதிமுக ஆட்சியின்போது வழங்கிய முதியவர் உதவித்தொகையை திரும்ப வழங்குமாறு தான் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். இதே போன்று அதிமுக ஆட்சியில் எடப்பாடியில் செய்யப்பட்ட பணிகளை நேரில் போய் பார்த்து சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிந்து கொள்ளலாம். திமுக ஆட்சியில் கிடைப்பில் போடப்பட்ட திட்டங்களை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று கூறினார்.



அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களைப் போல சாதனைகளைப் போல திமுகவால் செய்யவே முடியாது. ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் மூன்று லட்சம் கோடி கடன் வாங்கி உள்ள திமுக அரசு சேலத்திற்கு என எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் எங்களை விமர்சிப்பதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். முடிந்தால் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கிடப்பில் போடாமல் நிறைவேற்றுவதே அவரின் கடமையாக இருக்க வேண்டும். அதிமுக எதுவுமே செய்யவில்லை என பொய்யான தோற்றத்தை அமைச்சர் ராஜேந்திரன் உருவாக்கக் கூடாது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல அவரின் செயல்பாடுகள் உள்ளது.


முதலமைச்சர் ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை அவரால் வீழ்த்த முடியாது 30 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி நடத்திய அதிமுக பொன்விழா கண்டு வலிமையான கட்சியாக உள்ளது 2019 நாடாளுமன்ற தேர்தலை விட 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்று அதிமுக வளர்ச்சி அடைந்துள்ளது ஆனால் திமுக 7 சதவீத வாக்குகளை குறைவாக பெற்றதன் மூலம் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்து வருகிறது என்பது கண்கூடாக தெரியும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.