திருவாரூர் மாவட்டத்தின் எல்லை பகுதிகளுக்கு அருகில் காரைக்கால் மாவட்ட பகுதிகள் இருப்பதால் அங்கு இருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் மற்றும் சாராயத்தை சமூக விரோதிகள் கடத்தி வந்து இங்கு விற்பனை செய்து வருகின்றனர். எனவே திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். மேலும் காவல்துறையினர் இந்த வெளிமாநில மது பாட்டில்களை கடத்தும் கும்பலை பிடிக்க பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர் அதன் அடிப்படையில் எல்லை பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் சோதனை சாவடி மையங்களை அமைத்து காரைக்கால் பகுதியில் இருந்து திருவாரூர் மாவட்ட எல்லைக்குள் நுழையும் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்திய பின்னரே அனுமதிக்கின்றனர். இத்தனை கட்டுப்பாடுகளையும் மீறி நூதன முறையில் வெளிமாநில சாராயத்தை கடத்தி வரும் கும்பல் அதனை இங்கு முறைகேடாக விற்பனையும் செய்கின்றனர்.


இதனை தடுக்க காரைக்கால் எல்லை பகுதியில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்ட காவல் நிலையத்தினர் சோதனை சாவடிகளை அமைத்து வாகன சோதனை செய்வதுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தனிப்படை அமைத்து இதுபோன்று சாராயத்தை கடத்தி விற்கும் கும்பலை அடிக்கடி கைது செய்து அவரிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்தும் வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தண்டம்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து சாராயத்தை வாங்கி வந்து தனது வீட்டின் அருகே கடந்த 2010ஆம் ஆண்டு விற்பனை செய்து வந்துள்ளார் அதனை அடுத்து காவல்துறையினர் பிரகாஷை கைது செய்து அவரிடமிருந்து 250 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.  இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரகாஷ் உடல் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்துள்ளார் இதன் காரணமாக அந்த வழக்கானது முடிவுக்கு வந்துள்ளதால் அந்த சாராயத்தை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்நிலையில் நன்னிலம் அருகே உள்ள பனங்குடி கிராமத்தில் மக்கள் அதிகம் வசிக்காத பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் குழிதோண்டி 250 லிட்டர் சாராயத்தை குழியில் ஊற்றி தீயணைப்புத்துறை உதவியோடு குற்றவியல் நீதித்துறை நடுவர் சீதாலட்சுமி மதுவிலக்கு மாவட்ட துணை கண்காணிப்பாளர் அப்துல் கபூர் முன்னிலையில் தீயிட்டு எரித்தனர்.