தீப்பெட்டி தொழிலை பாதிக்கும் பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும்-மத்திய அமைச்சர்களிடம் உற்பத்தியாளர்கள் கோரிக்கை.




புதுடெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேஷனல் சிறுத்தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் எம்.பரமசிவம் தலைமையிலான நிர்வாகிகள் நேற்று சந்தித்து மனு வழங்கினர். மனுவில், எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களில் பெரும்பாலோர் குடிசைத் தொழில் வகையின் கீழ் உள்ளனர். மேலும், எங்கள் உறுப்பினர் அலகுகளில் சில 100 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பான தீப்பெட்டிகளை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. 


தீப்பெட்டி தொழிலை அழிவிலிருந்து பாதுகாக்க, இந்தியாவுக்குள் பிளாஸ்டிக் லைட்டர்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்கான தங்கள் முயற்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனாலும், பிளாஸ்டிக் லைட்டர்கள் விற்பனை குறையவில்லை. ஒரு லைட்டர் ரூ.20 என்ற குறைந்தபட்ச மதிப்பீட்டு வரியை அமல்படுத்திய போதிலும், இந்தியா முழுவதும் உள்ள சிறு கடைகளில் ஒரு பிளாஸ்டிக் லைட்டர் ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


பிளாஸ்டிக் லைட்டர்கள் நேபாள எல்லைகள் வழியாக கடத்தப்படுவதை எங்கள் உறுப்பினர்கள் ஆதாரங்களில் கண்டறிந்தனர். இவை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வது கண்டறியப்பட்டது. ஒரு பெட்டிக்கு 1000 லைட்டர்கள் வாகனங்கள், மனிதர்கள் மூலமாக கடத்தப்படுகின்றன.இந்த பிளாஸ்டிக் லைட்டர்கள் உதிரி பாகங்களாக கொண்டு வரப்பட்டு, இங்கே அதனை செய்கின்றனர். கடந்த 6 மாதங்களில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு பிளாஸ்டிக் லைட்டர்கள் உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இந்த இறக்குமதியால் அதிகளவு வரி ஏய்ப்பு உள்ளது. இது போன்ற சட்டவிரோத இறக்குமதிகள் மூலம் மத்திய அரசுக்கு ரூ.600 கோடி வரை வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், தீப்பெட்டி தொழிலையும் அழித்துவிடும்.


தீப்பெட்டி தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 7 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளனர். பிளாஸ்டிக் லைட்டர்கள் இறக்குமதியால் தீப்பெட்டி தொழில் முழுமையாக மூடும் நிலையில் உள்ளது. புதிய வழியில் பிளாஸ்டிக் லைட்டர்கள் கடத்தலை உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம். இதற்குரிய நடவடிக்கைகள் எடுத்து, பிளாஸ்டிக் லைட்டர் உதிரிபாகங்கள் கடத்தல், வரி ஏய்ப்பு ஆகியவற்றைத் தடுக்க வேண்டும். இதனால் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்படும், என தெரிவித்துள்ளனர்.


முன்னதாக, மத்திய அரசின் ஜவுளி நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்தும் நேஷனல் சிறுத்தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மனு வழங்கினர்.


இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டியில் 90 சதவீதம் தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நெல்லை, தென்காசி, விருதுநகர்  உள்ளிட்ட மாவட்டகளில் அதிகளவு தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. அதிலும்  கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில்தான் அதிக தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன.  குறிப்பாக 90 சதவீதம் பெண்கள்தான் தீப்பெட்டி ஆலைகளில் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிலை நம்பி 4 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.  மூலப்பொருள்களின் விலை உயர்வு, தீப்பெட்டியின் விலை அதிகரிப்பால் ஆர்டர்கள் குறைவு, தீப்பெட்டி பண்டல்களின் தேக்கம் என, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது  ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் சீன லைட்டர்களின் வருகையால் தீப்பெட்டி உற்பத்தித் தொழில் அடியோடு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு சிகரெட் லைட்டர் விற்பனை,  20 தீப்பெட்டிகளின் விற்பனையை தடை செய்து வருகிறது. எனவே சீன லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என மத்திய, மாநில .அரசுகளுக்கு தொடர்ந்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.