Vaazhai Movie Review: பரியேறும் பெருமாள் படம் மூலமாக தமிழில் அறிமுகமாகி கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக உருவெடுத்துள்ளவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை.


தன்னுடைய முந்தைய படைப்புகளில் சாதிய ஆதிக்க கொடுமைகளை அலசி ஆராய்ந்த மாரி செல்வராஜ், இந்த படத்திலும் ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளார். அதுவும் பள்ளி சிறுவர்களின் பார்வையில் படத்தை நமக்கு கடத்தி புது முயற்சி மேற்கொண்டுள்ளார். அந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளாரா? என்பதை பார்ப்போம்.


வாழை:


பரியேறும் பெருமாள், கர்ணன் படம்போலவே திருநெல்வேலியே இந்த படத்திற்கும் கதைக்களம். பள்ளி சிறுவனான சிவனைந்தம்தான் கதையின் நாயகன். கதையின் நாயகனான சிவனைந்தமும், அவரது நண்பன் சேகரும் பள்ளி விடுமுறை நாட்களில் வாழை தார் சுமக்கும் வேலைக்குச் செல்கிறார்கள். வாழைத் தார் சுமக்கும் பணிக்கு வேண்டா வெறுப்புடன் செல்லும் சிவனைந்தத்தின் பள்ளி பருவத்தையும், அவனது குடும்ப சூழலையும், அவனது ஆசைகளையும், அவன் வாழைத் தார் சுமக்கும் பணிக்குச் செல்லாத அந்த ஒரு நாளில் நிகழும் சம்பவம் என்ன? என்பதையும் மிக மிக தத்ரூபமாக படமாக்கியுள்ளார் மாரிசெல்வராஜ்.


கிராமத்து கதைக்களம்:


1997, 1998 காலகட்டத்தில் நடக்கும் கதைக்களம் என்பதால் அந்த காலகட்டத்தை கண் முன்னே நிறுத்தியதற்காகவே மாரி செல்வராஜை பாராட்ட வேண்டும். படத்தின் தொடக்க காட்சியிலே தென் மாவட்டத்தை கண்முன்னே காட்டிவிடுகின்றனர். ஆறு, வயல் என்று நெல் விளையும் பூமி என்று காட்டாமல் கண்மாய், கண்மாயில் வளர்ந்து நிற்கும் எருக்கஞ்செடி, அந்த மண்பாதைகள் என படம் நம்மை கிராமத்திற்கு கொண்டு செல்கிறது.


படத்தை பெரும்பாலும் தாங்கிப்பிடிப்பதே சிவனைந்தமும், சிவனைந்தத்தின் நண்பராக வரும் சேகர் என்ற சிறுவனுமே ஆகும். இவர்கள் இருவர் செய்யும் சேட்டைகளும் நம்மை வயிறு குலுங்கி சிரிக்க வைக்கிறது. குறிப்பாக, அந்த கமல்ஹாசன் காமெடி கைதட்டல்களை தியேட்டரில் அள்ளுகிறது. முதல் பாதி பெரும்பாலும் பள்ளி காட்சிகளிலே நகர்கிறது. அந்த காட்சிகள் சற்று பிசிறினாலும் தவறான புரிதலை, சொல்ல வந்ததை சொல்ல முடியாத காட்சிகளாக மாற்றிவிடும். இன்றைய தலைமுறையில் நடப்பது போல அந்த காட்சிகள் நடைபெறுவது போல எடுப்பதும் மிகவும் கடினமான ஒன்றாகவும் இருந்திருக்கும்.


கதாபாத்திர தேர்வுக்கு பாராட்டு:


படத்தின் ஆசிரியையாக வரும் நிகிலா விமல் ஆசிரியையாக அசத்தலாக நடித்துள்ளார். கனிவான ஆசிரியையாக பள்ளியில் நம் அனைவருக்கும் பிடித்த ஒரு ஆசிரியை நினைவுக்கு கொண்டு வந்துவிடுகிறார். குறிப்பாக, பஞ்சுமிட்டாய் சீலை கட்டி பாடலுக்கு அவர் போடும் ஆட்டம் நம்மையும் ஆட்டம் போட வைக்கிறது.


படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. கனியாக வரும் கலையரசன் படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஆதிக்கம் செலுத்தாவிட்டாலும் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் இளைஞராக அசத்தலாக நடித்துள்ளார். வேம்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ள திவ்யா துரைசாமி ஒரு பாசமான அக்காவாக அருமையாக நடித்திருந்தார்.


எதிர்பாராத கிளைமேக்ஸ்:


படத்தின் முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதியே படத்தின் பெரும் பலமாக அமைகிறது. பள்ளி ஆண்டு விழாவிற்கு நடனம் ஆட ஒத்திகை பார்க்கச் செல்லும் சிவனைந்தம் எதிர்கொள்ளும் சிக்கலும், அதேசமயம் அங்கே ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் அளவுக்கு நிகழும் மற்றொரு சம்பவமும் நம் மனதை ரணமாக்குகிறது. குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சி யாருமே எதிர்பாராதது. பலரையும் கண்ணீரில் நனையவைக்கிறது. அம்பேத்கரை சில காட்சிகளில் காட்டி அவரைப் பற்றிய புரிதல் அனைவருக்கும் எந்தளவு அவசியம் என்பதையும் உணர்த்தியுள்ளார்.


மனதை வருடும் பாடல்கள்:


சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. பல இடங்களில் அவரது பாடல்களை காட்டிலும் தமிழ்நாட்டில் பிரபலமான குறிப்பாக, கிராமப்புறங்களில் மிகவும் பிரபலமான மஞ்சள்பூசும் மஞ்சள்பூசும் வஞ்சிப் பூங்கொடி, தூதுவளையலை அரைச்சு, பஞ்சுமிட்டாய் சீலை கட்டி பாடல்களை ஒலிக்கவிட்டு நம்மை குதூகலப்படுத்தியிருப்பார். மேலும், ரயில் புழு, கோழி, பூனை, ஆடு இவைகளை அவ்வப்போது காட்டி கிராமத்தின் உள்ளேயே நம்மை பயணிக்க வைத்திருப்பார்கள்.


மாரி 'இது வேற மாறி'


கிராமத்தையும், அங்கு தன் வாழ்வில் சந்தித்தை நிகழ்வுகளையும் அப்படியே கண்முன் காட்டுவதில் மாரி செல்வராஜூக்கு நிகர் மாரி செல்வராஜ் என்றே சொல்லலாம். வாழைத் தோட்டங்களையும், மண் சாலைகளையும், கிராமத்தையும் அற்புதமாக தனது கேமராவில் படம்பிடித்து நம்மை 1998 காலத்திற்கே கொண்டு சென்றதற்கு தேனி ஈஸ்வரை பாராட்ட வேண்டும். இதே கதையை இளைஞர்கள் வழி சொல்லி பரியேறும் பெருமாள், கர்ணன் எனவும் சொல்லி வெற்றி பெற வாய்ப்பு இருந்தும், யதார்தத்தை யதார்த்தமாக காட்டி தேசிய விருதுக்கு தகுதியான ஒரு படத்தை மாரி செல்வராஜ் எடுத்துள்ளார். நிச்சயமாக இந்த படத்திற்கு கிராமப்புறங்களில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.


இந்த படத்தை மாரி செல்வராஜூம், அவரது மனைவியும் தயாரித்துள்ளனர்.