போலந்து நாட்டில் பாதுகாப்பு பணிகளில் இந்தியாவைப் போன்றே நாய்களும், குதிரைகளும் பயன்படுத்தப்படுகின்றன. அந்த நாட்டில் இடிபாடுகளில் சிக்கியவர்கள், பதுங்கியுள்ள அகதிகள், போதைப்பொருளை கண்டுபிடிப்பு, வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு, ரவுடிகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பணிகளில் பாதுகாப்பு படையினருக்கு துணையாக நாய்களும், குதிரைகளும் பயன்படுத்தப்படுகின்றன. அந்த நாட்டு காவலர்கள் ரோந்து பணிக்கு குதிரைகளையும் பயன்படுத்துகின்றனர். அவற்றின் பணிக் காலங்களில் அரசு சார்பில் அவைகள் நன்றாக பராமரிக்கப்படுகின்றன. ஆனால், அவற்றின் ஓய்விற்கு பிறகு அவற்றின் பராமரிப்பு கேள்விக்குறியாகிறது.




இதையடுத்து, அந்நாட்டு உள்துறை அமைச்சகம் ஓய்வுபெறும் விலங்குகளுக்கு ஓய்வூதியம் வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஓய்வுக்குப் பிறகு அந்த விலங்குகளின் பராமரிப்புக்கான செலவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஓய்வுபெற்ற குதிரைகள் மற்றும் நாய்களின் புதிய உரிமையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என்று போலந்து உள்துறை அமைச்சர் மரியூஸ் கமின்ஸ்கி தெரிவித்துள்ளார்.