திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 32 பதவியிடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல்கள் 2021 அக்டோபர் மாதம் 9ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 2019 ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் தேர்தல் நடைபெறாத மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியிடங்களில் வேட்பாளர் இறப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் கடந்த ஜூன் 30-ந் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.



 

அதன்படி மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட திருவாரூர் மாவட்ட ஊராட்சி வார்டு எண்.11, கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய வார்டு எண்.18 மற்றும் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய வார்டு எண்.11 மற்றும் கிராம ஊராட்சிகளில் பள்ளிவாரமங்கலம், மணவாளநல்லூர், விஸ்வநாதபுரம், மூவாநல்லூர், திருவோணமங்கலம் என 5 ஊராட்சிகள் இது தவிர கிராம ஊராட்சி வார்டுகள் 24 என காலியாக உள்ள 32 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனுக்கள் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பெறப்படும். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் 22ஆம் தேதியாகும். பெறப்பட்ட வேட்பு மனுக்கள் 23ஆம் தேதி ஆய்வு செய்யப்படும். 25ஆம்  தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். வாக்குப்பதிவு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (அக்டோபர்) 9ஆம் தேதி அன்று நடைபெறும். வாக்குப்பதிவு காலை 07.00 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் முடிவடையும். இதில் கடைசி ஒரு மணி நேரம் மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்குள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 12ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். தேர்தல் நடவடிக்கைகள் 16ஆம்  தேதி அன்று முடிவடைகிறது. 

 

தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு நாள் 20-ந் தேதியாகும். திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் தற்செயல் தேர்தல் 147 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். இதில் 31 ஆயிரத்து 422 ஆண் வாக்காளர்களும், 32 ஆயிரத்து 457 பெண் வாக்காளர்களும், 5 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 63 ஆயிரத்து 884 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தற்செயல் தேர்தல்கள் நடைபெறும் ஊரக உள்ளாட்சி அமைப்பிற்கு அருகில் 5 கி.மீ. சுற்றளவு பகுதி வரை தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் நடவடிக்கைகள் முடியும் வரை அமலில் இருக்கும்.



இந்த நிலையில் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிவாரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட இன்று தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் சுபஸ்ரீ என்பவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதேபோன்று மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் தங்களது வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்து வருகின்றனர். திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளருடன் மூன்று பேருக்கு மேல் உள்ளே அனுமதிக்கப்படவில்லை கூட்டமாக யாரும் வரக்கூடாது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.