மும்பையில்  சிறுமி ஒருவரை மிரட்டியது, பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, வன்கொடுமை செய்தது தொடர்பாக சகோதரர்கள் இருவரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது .


இருவருள் ஒருவர் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், அவர் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மற்றொருவர் ஜிம் ஒன்றை நடத்தி வருவதாகவும், சிறுமியின் அந்தரங்க வீடியோக்களை வைத்திருப்பதாகக் கூறி, சிறுமியை மிரட்டியது, துன்புறுத்தியது முதலான காரணங்களுக்காக கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் குற்றச் சம்பவம் நடைபெற்ற போது, மும்பையின் புறநகர்ப் பகுதியில் ஒரே கட்டிடத்தில் குற்றவாளிகளும், பாதிக்கப்பட்ட சிறுமியும் வசித்து வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 


இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், `கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 31 வயதான இளைய சகோதரரும், பாதிக்கப்பட்ட சிறுமியும் பழகத் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து, இந்த நபர் பாதிக்கப்பட்ட சிறுமியைத் திருமணம் செய்வதாகக் கூறி ஒப்புதல் அளித்துள்ளார். அவரது வீட்டில் யாரும் இல்லாத போது அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் 31 வயதான இளைய சகோதரர். பாதிக்கப்பட்ட சிறுமி 18 வயதை எட்டவில்லை எனத் தெரிந்தும், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமியை இரண்டு முறைக்கும் மேல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்’ எனக் கூறியுள்ளார். 



இந்த விவகாரம் தொடர்பாக மூத்த சகோதரருக்குத் தெரிய வர, அவர் பாதிக்கப்பட்ட சிறுமியைத் தொடர்புகொண்ட மிரட்டத் தொடங்கியுள்ளார். விவாகரத்தான இந்த நபர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம், தனது சகோதரருடன் அவரை வீட்டில் பார்த்ததாகவும், இருவரின் அந்தரங்கப் படங்களை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். 


இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி, `அந்தரங்கப் படங்களை அப்பகுதியில் வாழ்பவர்களிடமும், சமூக வலைத்தளங்களிலும் பகிரவுள்ளதாக மிரட்டியுள்ளார் அவர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியையும் அழைத்து, அவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்’ எனக் கூறியுள்ளார். 


தொடர்ந்து பேசிய அவர், `பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த துயரங்களை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறார். சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்த அவரின் தாய் அவரிடம் பேசியதில் இந்த விவகாரம் குறித்து தெரிய வந்திருக்கிறது. சமூகத்தால் ஒதுக்கப்படுவோம் என்ற அச்சத்தால் இந்த விவகாரத்தை சிறுமியின் தாய் காவல்துறையிடம் தெரிவிக்கவில்லை. எனினும் கடந்த வாரம், தன் மகள் இதே போன்ற நிகழ்வுகளை எதிர்காலத்திலும் சந்திக்கக்கூடும் என்று நினைத்த அவர், காவல்துறையிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்’ எனக் கூறியுள்ளார். 


பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த மும்பை காவல்துறை இந்த விவகாரத்தில் தேவையான சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததோடு, போக்சா சட்டத்திலும் இதனைப் பதிந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள சகோதரர்கள் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.