`அம்மா’ - ஒரு குழந்தையின் முதல் உறவு. `அம்மா’ என்ற சொல்லே பரிசுத்தத்தையும், களங்கமற்ற அன்பையும் வெளிக்காட்டும் ஒன்று. கரு தோன்றுவது முதல் குழந்தை வளர்வது வரை ஒவ்வொன்றும் அம்மாக்களின் கடும் உழைப்பால் நிகழ்வது. இந்தியா போன்ற நாடுகளில் அம்மாக்கள் பெரும்பாலும் சமையலறைகளிலும், வீட்டுப் பணிகளிலும் விதிக்கப்பட்ட வாழ்க்கைகளை வாழ்பவர்கள். அதே போல, தாம் பெறும் இன்னல்களைத் தமது குழந்தைகள் அனுபவிக்க கூடாது என எண்ணுவதோடு, அதற்காக தன் குழந்தைகளுக்காகப் பல்வேறு தியாகங்களையும் செய்வார்கள். 


சமூகத்தில் குழந்தையைப் பிரசவித்து, வளர்த்து, பெரியவர்களாக மாற்றுவதோடு மட்டுமின்றி அன்பையும், பண்பையும் குழந்தைகளுக்குப் போதிப்பது தாய். மேலும், ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய் தான். அம்மா சொல்வதைக் கேட்கும் குழந்தைகள் படிப்படியாக அம்மா பேசுவதையும் பேசுகின்றன. ஒரு கோழி தனது குஞ்சுகளைப் பாதுகாப்பது போல, குழந்தைகளைப் பாதுகாக்கும் தாய் தான் ஒரு குழந்தையின் முதல் அரண். தாய்மார்கள் பாடும் தாலாட்டு தான் குழந்தைகள் கேட்கும் முதல் இசை. 



உலகின் அனைத்து மதங்களும் தாய்மையைப் போற்றுபவை. தாயை தெய்வமாக வணங்குவது இந்து மத மரபு. கடவுளின் அன்பையும், அரவணைப்பையும் குறிக்க தாய்மை என்னும் பண்பை சுட்டிக்காட்டுகிறது கிறித்துவம். இஸ்லாமிய மதத்திலும் கிறித்துவம் போலவே பண்புகள் இருக்கின்றன. `தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது’ என அனைத்து மதங்களும், கலாச்சாரங்களும் கருதுகின்றன. தாய்மார்களின் தியாகம் செறிந்த கதைகள் நம் வரலாறு முழுவதும் உண்டு. 


`ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’ என்கிறார் திருவள்ளுவர். தன் குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்வதோடு, ஒரு துளி பொறாமை கூட இல்லாமல் பெரிதும் மகிழும் ஓர் உறவு தாயாகவே இருக்க முடியும். தான் பெற்று வளர்த்த குழந்தை நற்பண்பு மிக்கதாக சமூகத்தில் போற்றப்படும் போது தாயானவள் பெற்றதை விட மகிழ்ச்சி கொள்கிறாள் என்பது வள்ளுவம் கூறும் வாக்கு. 


இந்தியா போன்ற ஆணாதிக்க சமூகத்தில் பெண் என்பவள் குழந்தைகளை உற்பத்தி செய்வதற்காகவும், சாதிய மரபை மீண்டும் தொடர்வதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறாள். இந்த அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் தாயின் கருணையும், தியாகமும் ஒரு குழந்தையை இந்தச் சமூகத்தில் வளர்த்து குடிமகனாக மாற்றுகிறது. தாய்மை போற்றப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லையென்ற போது, தாய்மையின் தியாகத்தின் மீது ஆணாதிக்கம் குதிரை சவாரி செய்வது நாம் வாழும் சமூகத்தின் அவல நிலையின் சான்று. 



அதே வேளையில், குழந்தை பெறும் தாய்கள் மட்டுமே பெண்கள் எனக் கூறுவதும் , குழந்தை பெற முடியாத பெண்களைக் கடுமையான விமர்சனங்களால் துளைத்து எடுப்பதும் நம் சமூகத்தில் நிலவும் பிரச்னைகளுள் ஒன்றாக இருக்கிறது. தாய்மை என்பதைப் புனிதப்படுத்துவதன் விளைவாக இந்தப் பிரச்னை எழுவதால், தாய்மையையும் தாய்மார்களையும் கொண்டாடுவதோடு, அதனைப் புனிதப்படுத்தாமல், தெய்வத்தன்மை வழங்காமல் இருப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும். 


தாய்மார்களைத் தெய்வமாக மாற்றுவதை விடுத்து, மனிதர்களாக சமமாக நடத்துவதோடு, அவர்களோடு நேரம் செலவு செய்வது, அவர்களது பணிகளைக் குறைப்பது, விடுமுறை இல்லாமல் உழைக்கும் அம்மாவுக்கு எந்நேரமும் உதவத் தயாராக இருப்பது ஆகியவை மட்டுமே அன்னையர் தினத்திற்கான சிறந்த பரிசாக இருக்க முடியும். 


அம்மாக்களின் கடும் உழைப்பையும், சுரண்டலையும் குறைக்க இந்த அன்னையர் தினத்தில் உறுதி கொள்வோம்.  அம்மாக்களின் உழைப்பு குறைந்தால், அம்மாக்கள் மகிழ்ந்தால், ஒவ்வொரு நாளும் அன்னையர் தினமே!


அன்னையர் தின வாழ்த்துகள்!