மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் கலந்துகொள்ள சென்ற தன்னை தரக்குறைவாகப் பேசி கோவில் ஊழியர்கள் விரட்டியதாக அஸ்வினி என்ற நரிக்குறவர் இனப் பெண்ணின் பேட்டி வைரலாகியது. இதனையடுத்து அஸ்வினியை தேடி அழைத்துவரக் கூறி, அவர்களது குடும்பத்தாரோடு கோவிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு உணவருந்தினார். தொடர்ந்து நரிக்குறவர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.


இந்த சம்பவத்தை அடுத்து நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பூஞ்சேரி கிராமத்து இருளர் & குறவர் இன மக்களுக்குப் பட்டா, சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, வாழிடச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, நலவாரிய அடையாளச் சான்றிதழ், பயிற்சி சான்றிதழ், வங்கிக்கடன்கள் ஆகியவற்றை வழங்கினேன்.






இருளர் மற்றும் குறவர் இன வாழ்வில் ஒளியேற்றும் நாள் இது!


 






ஆயிரமாயிரம் ஆண்டுகள் சமூகத்தில் புரையோடிவிட்ட அழுக்குகளைக் களைந்து, சமூகநீதியை நிலைநாட்டி, மானுட ஒளியைக் காக்க நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் உள்ளது.




அதனைத்தான், "நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது" என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்.




திராவிட இயக்கம் உருவாகி நூறாண்டுகளைக் கடந்திருக்கலாம். ஆனால் காலம் என்ற பெருவெளியில் நூறாண்டு என்பது கைக்குழந்தையே. இவற்றையெல்லாம் செய்யும்போது, திராவிட இயக்கம் கடந்து வந்த நெருப்பாறு என் நினைவுகளில் நிழலாடுகிறது! 'பெரியார் - அண்ணா - கலைஞர்' ஆகியோரை நெஞ்சிலேந்தி அவர்களுக்கான உதவிகளை வழங்கினேன். நடமாடும் கோயில் திருப்பணி தொடரும்! என பதிவிட்டுள்ளார்.






இதன் மூலம், தீபத்தை மட்டும் வழிபடுவதை விடுத்து மனித குலத்தில் ஒளி ஏற்றவேண்டும். அதுதான் பண்டிகை என மு.க. ஸ்டாலின் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என திமுகவினர் கூறுகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண