மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா,தாளடி என முப்போக நெல் சாகுபடி பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினாலும் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காத காரணத்தினாலும் மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படாமல் போனது இதனால் டெல்டா மாவட்டங்களில் முப்போக சாகுபடி நடைபெறாமல் ஒரு போக சம்பா சாகுபடியை மட்டும் விவசாயிகள் செய்து வந்தனர். 



இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் தேதி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையை திறந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறப்பதற்கான உத்தரவிட வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.



இந்நிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார். இதற்கு டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மிகுந்த வரவேற்பையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் இந்த அறிவிப்பின் மூலம் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளது, குறிப்பாக குறுவை சாகுபடி பணிகளில் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவிலும் நாகை மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் விவசாயம் செய்ய விவசாயிகள் தங்கள் நிலங்களை தயார் செய்து வருகின்றனர். குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை மானிய விலையில் அரசு வழங்க வேண்டும் எனவும், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்ற தமிழக அரசுக்கு கோரிக்கையையும் விவசாயிகள் விடுத்துள்ளனர்