இந்தியாவில் சமீப காலமாக மாரடைப்பு ஏற்படும் விகிதம் அதிகரித்துள்ளது. அண்மையில் சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனு தாக்கல் செய்தார். அவர் ஆர்டிஐ பதிலில் ’2021  ஜனவரி மாதத்திலேயே மும்பை நகரில் மாரடைப்பு மரணங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6 மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


புனீத் ராஜ்குமார், கேகே போன்ற பிரபலங்கள் மாரடைப்பாக அகால மரணமடைந்த நிகழ்வுகள் அண்மைக்காலமாக மாரடைப்பு பற்றிய விழிப்புணர்வு செய்திகளை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாரடைப்புக்கும் பாலினத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்ற பேச்சுகளும் எழத் தொடங்கியுள்ளன.


ஜமா இன்டர்நல் மெடிசின் என்ற மருத்துவ நூலில் வெளியான ஒரு ஆய்வறிக்கையில் பெண்களைவிட ஆண்களுக்கு மாரடைப்பு வர இருமடங்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டுளது.




குர்கான் பரஸ் மருத்துவமனை இதய நோய் நிபுணர் மருத்துவர் அமித் பூஷன் சர்மா இது குறித்து கூறுகையில், பெண்களை விட ஆண்களுக்கே மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது ஏன் என்றால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி வரும். அதனால் அவர்களுக்கு மாரடைப்புக்கு எதிராக இயற்கையாகவே ஹார்மோன் பாதுகாப்பு இருக்கும். 


இளம் வயது ஆண்கள் மத்தியில் மாரடைப்பு அதிகமாக இருக்கக் காரணம் புகைப்பழக்கம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவவையே. மாரடைப்புக்கு முதன்மையான அபாய காரணிகள் இவைதான். சிலருக்கு தலைமுறை பிரச்னையாகவும், பலவீனமான இதய குழாய்களாலும் ஏற்படலாம்.


ஜெய்ப்பூர் நாராயணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் தேவேந்திர குமார் ஸ்ரீமால் கூறுகையில் ஆண்களின் இதயத்தை ஒப்பிடுகையில் பெண்களின் இதயம் சற்று சிறியது. அவர்கள் இதயத்தின் இன்டீரியர் சேம்பர்களுக்கு சிறியது. ஆண்களின் இதயத்தைவிட அதிக வேகமாக பெண்களின் இதயம் துடித்தாலும் கூட பெண்களின் இதயம் சுருங்கும் போது வெளியேற்றப்படும் ரத்தத்தின் அளவு ஆண்களின் இதயம் வெளியேற்றுவதைவிட 10 சதவீதம் குறைவு. ஆண்களின் இதய தமனிகள் சற்று குறுகியதாக இருக்கும். அதனால் ரத்தம் பாயும்போது அதிக அழுத்தம் ஏற்படுகிறது.


ஆகையால் பெண்களைவிட ஆண்களுக்கே மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாது இளம் வயதில் மாரடைப்பு ஏற்படவும் அவர்களுக்கே வாய்ப்பு அதிகமாக உள்ளது.


திடீர் மாரடைப்பு 


ஒரு பக்கம்  உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் அதே வேளையில், அதிக அளவு உடற்பயிற்சி மேற்கொள்வது அதை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


மேலும், டைப் 2 நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், அதிக நேரம் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்தல், குறைவான உடல் செயல்பாடு, குடும்ப வரலாறு, உடல் பருமன் போன்றவற்றால் இதய நோய்கள் வயது வித்தியாசமின்றி அதிகரித்துவருவதாக எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். வருடத்துக்கு ஒருமுறையாவது உடல் முழு பரிசோதனை செய்துகொள்வது இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.