டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. 2020ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருந்தது. அதைத் தொடர்ந்து டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியேற்றார்.  ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்களை பாஜக தன் பக்கம் இழுத்து வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து டெல்லி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இதற்காக சிறப்பு கூட்டம் ஒன்று கூட்டப்பட்டிருந்தது. 


இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் மீது பாஜக எம்.எல்.ஏக்கள் குற்றம் சாட்டினர். அத்துடன் அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ விஜயேந்தர் குப்தா சட்டப்பேரவை துணை சபாநாயகரிடம் தன்னுடைய கவன ஈர்ப்பு தீர்மானத்தை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு அவர் அனுமது மறுத்தார். இதைத் தொடர்ந்து டெல்லி பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் துணை சபாநாயகர் சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க கூடாது என்று இடைநீக்கம் செய்திருந்தார்.அதன்பின்னர் டெல்லி சட்டப்பேரவைக்கு வெளியே கூடியிருந்த பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டெல்லி சட்டப்பேரவைக்கு வெளியே பதற்றமான சூழல் நிலவியது. 


அதன்பின்னர் இந்தக் கூட்டத்தில் இன்று டெல்லி முதலமைச்ச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக இன்று சட்டப்பேரவையிலிருந்த 58 எம்.எல்.ஏக்களும் ஆதரவளித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றுள்ளது. 


இந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பாக டெல்லி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அதில், “எங்களுடைய துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வீட்டில் ரெய்டு நடத்தியதால் குஜராத்தில் எங்களுடைய வாக்கு வங்கி 4% அதிகரித்துள்ளது. அதே அவரை கைது செய்யும் பட்சத்தில் அந்த வாக்கு வங்கி 6% அதிகமாகும். டெல்லி சட்டப்பேரவையில் நாங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வந்ததற்கு காரணம் பாஜகவின் ஆப்ரேஷன் லோட்டஸ் தோல்வி அடைந்துள்ளது என்பதை நிரூபிக்க தான். அத்துடன் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் அனைவரும் எங்களுடன் தான் உள்ளனர். அவர்கள் யாரும் கட்சி மாறவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.


டெல்லியிலுள்ள 40 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை பாஜகவினர் சுமார் தலா 20 கோடி ரூபாய் அளித்து தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்ததாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் குற்றச்சாட்டப்பட்டது. எனினும் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்து வருகிறது. டெல்லியில் பாஜக தற்போது நடைபெற்று வரும் சிபிஐ ரெய்டு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்து வருகிறது. டெல்லி சட்டப்பேரவையில் பாஜக தற்போது 8 எம்.எல்.ஏக்களை வைத்துள்ளது. பாஜக டெல்லியில் ஆட்சி அமைக்க இன்னும் 28 எம்.எல்.ஏக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 


மணீஷ் சிசோடியா வீட்டில் சோதனை:


டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவின் பரிந்துரையின் பேரில் கலால் வரி கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாக அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் பலர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ததில் இருந்து ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே அரசியல் குழப்பம் தீவிரமடைந்துள்ளது.


இந்த வழக்கு தொடர்பாக தலைநகரில் உள்ள சிசோடியாவின் வீடு மற்றும் நாட்டில் உள்ள 30 இடங்களிலும் சிபிஐ ஆகஸ்ட் 19 அன்று சோதனை நடத்தியது. சிசோடியாவை போலி வழக்கில் சிக்க வைத்து அவரது இமேஜைக் கெடுக்க சிபிஐயை மத்திய அரசு பயன்படுத்தியதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. 


குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், கெஜ்ரிவாலின் பெருகிவரும் புகழ் மற்றும் அவரது ஆட்சி மாதிரியால் பாஜக அச்சம் அடைந்துள்ளதாக ஆம் ஆத்மி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சிபிஐ சோதனை நடைபெற்றதை தொடர்ந்து, சில பகீர் தகவல்களை சிசோடியா வெளியிட்டிருந்தார். தன் மீதான அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளையும் கைவிடுவதாகவும், அவர் கட்சி மாறி பாஜகவில் சேர்ந்தால் தன்னை டெல்லி முதலமைச்சராக நியமிப்பதாக பாஜக தன்னை அணுகியதாகக் கூறினார்.