மயிலாடுதுறை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தனது பரப்புரை பயணத்தை தீவிரப்படுத்தியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி மயிலாடுதுறைக்கு வருகை தரவுள்ளார். இதையொட்டி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (எஸ்.பி.) த.வெ.க. சார்பில் பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

திருச்சியில் துவங்கிய பரப்புரை 

தமிழக வெற்றிக் கழகம், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக தனது பரப்புரையை கடந்த செப்டம்பர் 13, சனிக்கிழமை அன்று திருச்சியில் இருந்து தொடங்கியது. இப் பயணத்தின் போது, தலைவர் விஜய்க்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டதால், திட்டமிட்டபடி பரப்புரையை மேற்கொள்ள முடியவில்லை என்றும், பயணத்தில் தாமதமானது. திருச்சியில் மக்கள் மத்தியில் பேசிய விஜய், அரியலூரிலும் பேசினார். எனினும், பெரம்பலூரில் பயணத் தாமதம் காரணமாக, நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

சனிக்கிழமை தோறும் பரப்புரை பயணம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஒவ்வொரு சனிக்கிழமையிலும் தனது பரப்புரையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த வாராந்திர பயணத்தின் படி, வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு அவர் வருகை தருகிறார். அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 27-ஆம் தேதி திருவள்ளூர் மற்றும் வடசென்னை பகுதிகளில் அவர் பரப்புரை மேற்கொள்கிறார். அக்டோபர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

மயிலாடுதுறையில் த.வெ.க. சார்பில் மனு

மயிலாடுதுறைக்கு வரும் விஜய், சாலை மார்க்கமாகப் பயணம் செய்து மக்களைச் சந்திக்க உள்ளார். இதற்காக, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம், தமிழக வெற்றிக் கழகத்தின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கோபிநாத் ஒரு மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில், மயிலாடுதுறை சின்னக்கடை வீதி பகுதிகளில் விஜய் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருச்சி பரப்புரையின் அனுபவத்தின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், காவல்துறை அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளனர். மயிலாடுறை சின்னக்கடை வீதி, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. கடந்த காலங்களில் அனைத்து அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் இந்த சின்னக்கடை வீதியில்தான் நடந்துள்ளன. இப் பகுதி மக்கள் மத்தியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் என்பதால், விஜயின் பரப்புரை நிகழ்வின் போது, அமைதியை நிலைநாட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு

விஜய் அரசியலில் நுழைந்துள்ள நிலையில், அவரது ஒவ்வொரு பயணமும் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு, அவரது கட்சியின் வெற்றிக்கு எவ்வாறு உதவும் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்த பரப்புரை பயணம், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் ஆயத்தப் பணிகளின் முக்கிய ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. கட்சித் தலைவர் விஜய் நேரடியாக மக்களை சந்தித்து, தனது கட்சியின் கொள்கைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணம், இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் என்று த.வெ.க.வினர் நம்புகின்றனர்.

மயிலாடுதுறை வருகை, விஜயின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அவரது வருகை, அப்பகுதியில் உள்ள தொண்டர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்றும், கட்சியின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.