காரைக்கால் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக பாண்டிச்சேரி சாராயம் கடத்தி வந்த இளைஞர் ஒருவரை மயிலாடுதுறை தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 400 சாராய பாட்டில்களும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சுமார் 50,000 ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடரும் மதுபான கடத்தல்
மயிலாடுதுறை மாவட்டம் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திற்கு அருகே உள்ளதால் நாள்தோறும் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுபானங்கள் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கடத்தப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வந்தாலும், வெளிமாநில மதுபான கடத்தல் என்பது மயிலாடுதுறை மாவட்டத்தில் குறைந்தபாடு இல்லை.
எஸ்.பி.உத்தரவு
இந்நிலையில் இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலினின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு குற்றங்களைத் தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிர மது வேட்டை மற்றும் வாகனத் தணிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத மதுபானக் கடத்தல் மற்றும் விற்பனையை முழுமையாகத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், உத்தரவின் பேரில் தீவிர மது வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பெரம்பூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கொடிவிளாகம் அருகே, மயிலாடுதுறை உட்கோட்ட தனிப்படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பனங்குடி காலணித் தெருவைச் சேர்ந்த செல்லதுரை என்பவரது மகன் 25 வயதான எழிலரசன் (25) என்பவர், TN82-P-0204 என்ற பதிவு எண் கொண்ட பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனத்தில் காரைக்காலில் இருந்து பாண்டிச்சேரி சாராய பாட்டில்களைக் கடத்தி வந்துள்ளார்.
தப்பிக்க முயற்சி, மடக்கி பிடித்த போலீஸ்
வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசாரைக் கண்டதும், எழிலரசன் தப்பிக்க முயற்சித்துள்ளார். இருப்பினும், போலீசார் அவரை உடனடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். விசாரணையில் அவர் சட்டவிரோதமாக சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எழிலரசன் இடமிருந்து 180 மி.லி. அளவுள்ள 400 பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், இந்த மது கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சுமார் 50,000 ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தைப் பொது ஏலத்தில் விடுவதற்கான நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.பி. கடும் எச்சரிக்கை
சட்டவிரோத மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மதுவிலக்கு குற்றங்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக, இலவச உதவி எண்களையும் அவர் அறிவித்துள்ளார். பொதுமக்கள் மதுவிலக்கு குற்றம் தொடர்பான தகவல்களை 10581 மற்றும் 8870490380 ஆகிய எண்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகவல் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களைக் கட்டுப்படுத்தும் காவல்துறை அதிகாரிகளின் உறுதியான நிலைப்பாட்டைக் காட்டுகிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இத்தகைய தீவிர சோதனைகளால், சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.