Mayiladuthurai leopard: 22 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்ற சிறுத்தை - அடுத்த மூவ் எங்கே? திணறும் வனத்துறை

மயிலாடுதுறையில் கடந்த 4 நாட்களாக 5 கிலோமீட்டர் சுற்றளவில் சுற்றித்திரிந்த சிறுத்தை தற்போது 22 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்றுள்ளது.

Continues below advertisement

டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் செம்மங்குளம் பகுதியில் கடந்த ஏப்ரல் 2 -ம் தேதி இரவு சிறுத்தை ஒன்று  நடமாட்டுவதாக பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், சிறுத்தையின் காலடி தடத்தை வைத்து சிறுத்தை ஊருக்குள் வந்துள்ளதை உறுதி செய்தனர். தொடர்ந்து சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறை தீயணைப்புத்துறை காவல்துறை இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 3-ம் தேதி சிறுத்தை பதுங்கி இருப்பதாக கருதப்பட்ட கூறைநாடு தெற்கு சாலிய தெரு , செங்கழநீர் பிள்ளையார் கோயில் தெரு,  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  வலைகள் கயிறுகளுடன் தீவிரமாக சிறுத்தையை  தேடி வந்தனர்.  

Continues below advertisement


5 கிலோமீட்டர் சுற்றளவில் உலவும் சிறுத்தை 


இந்நிலையில் கடந்த 4 -ம் தேதி அதிகாலை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை பதுங்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் அறுவடை இயந்திரத்தின் மேல் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் சிறுத்தை கடந்து சென்றதை பார்த்ததாக  அளித்த தகவலின் பெயரில் வனத்துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டுட்டுள்ளனர்.  மூன்று கிலோமீட்டர் தூரம் சிறுத்தை  கடந்து வந்து பதுங்கியுள்ளது. சிறுத்தையின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டு மார்க் செய்யப்பட்டுள்ளது. 


இரவு பகலாக தேடுதல் பணி

சிறுத்தை நடமாட்டம் உள்ள செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு மற்றும் ஊர்குடி ஆகிய பகுதிகளை ஆய்வு செய்து தற்போது வரை 30தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியை தீவிர படுத்தியுள்ளனர். மேலும்  சிறுத்தைப் பிடிக்கும் பெரிய அளவிலான 7 கூண்டுகளும் வைக்கப்பட்டுள்ளது. சிறுத்தைப் புலியை பிடிப்பதற்கு  குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றது.  சிறுத்தை எங்கிருக்கிறது என்பது புலப்படாத நிலையில் 3-ம் நாளான நேற்று முன்தினம் 5 -ம் தேதி சித்தர்காடு பகுதியில் ஆடு ஒன்ற கழுத்து குதறிய நிலையைில் இறந்து கிடந்தது. ஆடு கொல்லப்பட்டிருந்த தன்மையை ஆராய்ந்த வனத்துறையினர் ஆட்டை சிறுத்தை கொன்று இருக்க 70 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும் கால்தடங்கள் இல்லாததால் உறுதியாக சொல்லமுடியாது உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரியவரும் என்று தெரிவித்தனர். 


இரண்டாவது ஆடு உயிரிழப்பு 

தொடர்ந்து ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 3 கூண்டுகளில் ஆடுகள் மற்றும் இறைச்சியை வைத்து  சிறுத்தை அகப்படுமா என்று வனத்துறையினர் காத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று  காலை மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உள்ள கூட்ஸ் யார்ட் பிளாட்பார்மில் ஒரு ஆட்டினை அடித்து சிறுத்தை தின்றதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். கொல்லப்பட்ட ஆட்டின் தலை மற்றும் முன் கால்கள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில் அவற்றை வனத்துறை மற்றும் போலீசார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்பகுதியில் ஆடுகளை நாய்கள் கடித்து குதறி கொள்ளும் என்று கூறப்படும் நிலையில் ஆட்டின் தலை மற்றும் முன் கால்கள் கைப்பற்றப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சிறுத்தையை கண்காணித்து அதனை திறமையாக பிடிக்கும் பணியில் உள்ள பொம்மன், காலான் ஆகிய இரு இறந்த ஆட்டை ஆய்வு செய்தனர்.  சிறுத்தை வந்து சென்றதற்கான தடயங்கள் இல்லாததால் சிறுத்தை தான் கொன்றது என்பதை உறுதிப்படுத்த இயலாது என்று வனத்துறையினர் கூறினர். ஆட்டை உடற்கூறாய்வு செய்வதற்கு எடுத்து சென்றனர். பின்னர் நாய் கடித்து கொன்றதாக தகவல் அளித்தனர். 



மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டரில் சிறுத்தை 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் உள்ள காஞ்சிவாய் என்ற கிராமத்தில் அக்ரஹார தெருவில் சிறுத்தை நடமாட்டம் நேற்று இரவு தென்பட்டதாக அப்பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அடுத்து அந்த பகுதியில் இன்று பாலையூர் போலீசார் ஆய்வு செய்து அந்த கால் தடம் சிறுத்தையின் கால் தடத்தை ஒத்திருப்பதை அறிந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வன ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மற்றும் மசினக்குடியில் டி20 புலியை பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட நீலகிரி முதுமலையில் பணியாற்றும் பொம்மன் தலைமையிலான மூன்று வன காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் அங்கு பதிவானது சிறுத்தையின் கால் தடம் என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள பெருமாள் கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. காஞ்சிவாய் பகுதி என்பது ஏற்கனவே மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை தென்பட்ட இடத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola