மயிலாடுதுறை: சீர்காழி அருகே கள்ள உறவு விவகாரத்தால் ஏற்பட்ட மோதலில், சென்னை ஆவடியில் தலைமறைவாக இருந்த மயிலாடுதுறை மேல குத்தவக்கரையைச் சேர்ந்த 35 வயதான லட்சுமணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கொள்ளிடம் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததாலேயே இந்தக் கொலை நடந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கள்ள உறவுப் பின்னணி
மயிலாடுதுறை மாவட்டம் மேல குத்தவக்கரை கிராமத்தைச் சேர்ந்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் தற்காலிக பணியாளரான லட்சுமணனுக்கும் அஞ்சலி என்பவருக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் லட்சுமணன், கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த தனது பெரியப்பா மகனான அண்ணன் ராஜா (எ) ராமச்சந்திரனுடன் நெருக்காமாக பழகி வந்துள்ளார். ராஜாவுக்கு சசிகலா மற்றும் சத்யா என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். ராஜாவின் தந்தை வீட்டிற்கு அருகில் லட்சுமணன் வசித்ததால், லட்சுமணனுக்கு ராஜாவின் மனைவிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் கள்ள உறவாக மாறியுள்ளது.
பணம் கேட்டு மிரட்டல்
லட்சுமணனின் கள்ள உறவு குறித்து அறிந்த ராஜா, அதை வெளியே சொல்லாமல் இருக்க, லட்சுமணனிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தர மறுத்தால் கொன்றுவிடுவதாகவும், தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. ராஜாவின் மிரட்டலுக்குப் பயந்த லட்சுமணன், கடந்த மூன்று மாதங்களாக சென்னை ஆவடி பகுதியில் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். எனினும், ராஜாவும் அவரது தந்தை சம்பந்தம், நண்பர் ராகுல் உள்ளிட்டோர் லட்சுமணனைத் தொடர்ந்து தேடி வந்துள்ளனர்.
போலீசில் புகார் அளித்தும் பலனில்லை
தலைமறைவாக இருந்த லட்சுமணனை தேடி அலைந்த ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள், லட்சுமணனின் மனைவி அஞ்சலியைச் சந்தித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். கணவர் இருக்கும் இடத்தையும் கேட்டு துன்புறுத்தியுள்ளனர். இது தொடர்பாக, அஞ்சலி கடந்த ஜூலை மாதம் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அப்போது, இருதரப்பினரையும் அழைத்த போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
மீண்டும் கொலை மிரட்டல்
போலீஸ் சமரசத்திற்குப் பிறகும், ராஜா, சம்பந்தம், ராகுல், அமுதா, முத்துலட்சுமி ஆகியோர் மீண்டும் லட்சுமணனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த நிலையில், அஞ்சலி தனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, நேற்றுமுன்தினம் காவல்துறை துணை கண்காணிப்பாளர், காவல் கண்காணிப்பாளர், காவல் ஆணையர் ஆகியோருக்குக் கடிதம் மூலம் புகார் மனு அளித்தார். காவல்துறையிடம் புகார் அளித்த அடுத்த நாளே, கொள்ளிடம் அருகே உள்ள தெற்கு ராஜன் வாய்க்காலில் வெட்டுக் காயங்களுடன் லட்சுமணன் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி அஞ்சலி வாக்குமூலம்
லட்சுமணனின் மனைவி அஞ்சலி அளித்த வாக்குமூலத்தில், தனது கணவர் ராஜாவின் மனைவிகளுடன் கள்ள உறவில் இருந்ததால், ராஜா ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும், இதனால் அவர் சென்னை ஆவடியில் தலைமறைவாக வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நேற்று இரவு தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது, ராஜாவும் அவரது தந்தை சம்பந்தம், ராகுல் உள்ளிட்டோர் அவரைக் கடத்திச் சென்றதாகவும், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். காலை கணவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஆடியோ ஆதாரம்
இந்தக் கொலைச் சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, ராஜாவின் இரண்டாவது மனைவி சத்யா, லட்சுமணனுக்குத் தொடர்பு கொண்டு, ராஜா மற்றும் அவரது நண்பர்கள், லட்சுமணனைக் கொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்திருப்பதாகப் பேசிய ஆடியோவும் வெளியாகி, இந்தக் கொலையின் பின்னணியை உறுதிப்படுத்துகிறது.
தேடுதல் வேட்டை
இந்தக் கொலை தொடர்பாக, தப்பி ஓடிய ராஜா (எ) ராமச்சந்திரன், அவரது தந்தை சம்பந்தம், தாய் அமுதா, நண்பர் ராகுல், உறவினர் முத்துலட்சுமி உள்ளிட்ட ஐந்து பேரைக் கைது செய்ய, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வருகின்றனர். காவல் துறையினர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்தக் கொலை நடந்திருக்காது என உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.