மயிலாடுதுறை: தமிழகத்தில் வாழும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், சாத்தியக்கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABEDCO) மூலம் தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களின் கீழ் கடன் உதவி வழங்கப்படுவதாக கூறி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் விரிவான தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ள தகுதியான நபர்கள் மற்றும் சுய உதவிக்குழுவினர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Continues below advertisement

இத்திட்டங்களின் முக்கிய அம்சங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

கடன் திட்டங்களின் நோக்கம் மற்றும் தகுதிகள்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்தோர் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக, சிறு வர்த்தகம், வணிகம், விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் போன்றவற்றைச் செய்ய இக்கடனுதவி வழங்கப்படுகிறது.

Continues below advertisement

பொதுவான தகுதிகள்

* இனம்: விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.

* வருமானம்: குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

* வயது: விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

* குடும்ப வரம்பு: ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே இக்கடனுதவி வழங்கப்படும்.

தனிநபர் கடன் திட்டம்

தனிநபர் கடன் திட்டத்தின் கீழ், சிறு வர்த்தகம்/ வணிகம், விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிகபட்சமாக ரூபாய் 25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

 * வட்டி விகிதம்: ரூ.1.25 லட்சம் வரை – 7% ஆண்டு வட்டி விகிதம்.

* ரூ.1.25 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை – 8% ஆண்டு வட்டி விகிதம்.

* திருப்பி செலுத்தும் காலம்: 3 முதல் 5 ஆண்டுகள் வரை.

குழுக் கடன் திட்டம்

சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கான இத்திட்டத்தில், சிறு தொழில்/ வணிகம் செய்வதற்கு கடன் வழங்கப்படுகிறது.

* கடன் வரம்பு: ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை.

* குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25.00 லட்சம் வரை.

 * வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7%.

* திருப்பி செலுத்தும் காலம்: 3 ஆண்டுகள்.

 குழு தகுதிகள்

சுய உதவிக் குழு துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.

* திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும்.

* ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

* இரு பாலருக்கான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கும் இக்கடனுதவி வழங்கப்படுகிறது.

கறவை மாடு வாங்கக் கடனுதவி

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு, கறவை மாடு வாங்குவதற்கான பிரத்யேக கடனுதவியும் வழங்கப்படுகிறது.

கடன் வரம்பு: ஒரு கறவை மாட்டிற்கு ரூ.60,000/- வீதம், 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

 * வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7%.

* திருப்பி செலுத்தும் காலம்: 3 ஆண்டுகள்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெறுவதற்கும், சமர்ப்பிப்பதற்கும் உரிய ஆவணங்களுடன் தயாராக இருக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள் பெறும் இடங்கள்:

* மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்.

* மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள்.

* இணையதளம்: இக்கழக இணையதள முகவரியான www.tabcedco.tn.gov.in-இல் இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்

* பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம்.

 * சாதிச் சான்றிதழ்.

 * வருமானச் சான்றிதழ்.

* பிறப்பிடச் சான்றிதழ்.

* குடும்ப அட்டை (ரேஷன் கார்டு)

* ஓட்டுநர் உரிமம் (தேவைப்படும் தொழிலுக்கு).

* ஆதார் அட்டை.

* வங்கி கோரும் பிற ஆவணங்களின் நகல்கள்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அலுவலகங்கள்

* சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்.

* கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்.

 * கூட்டுறவு வங்கிகள்.

மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் இந்த அரிய கடன் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, கடன் விண்ணப்பங்களைப் பெற்று, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயனடையுமாறு வலியுறுத்தியுள்ளார்.