மயிலாடுதுறை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று அக்டோபர் 16-ம் தேதி விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை தொடர்ந்து பருவமழை காலங்களில் ஏற்படக்கூடிய சவால்களைச் சமாளிக்க மாவட்ட நிர்வாகம் முழு அளவில் தயாராக இருப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.

Continues below advertisement

 

ஏற்கனவே ஆகஸ்ட் 18, செப்டம்பர் 29 மற்றும் இன்றைய தினம் என மூன்று கட்டங்களாக அனைத்து துறை அலுவலர்களுடனும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, முன்னேற்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Continues below advertisement

தயார் நிலையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு மையங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவமழையைத் துல்லியமாகக் கண்காணிக்க 13 தானியங்கி மழைமானி மையங்கள், 3 தானியங்கி வானிலை மையங்கள் மற்றும் 6 மழைமானிகள் செயல்படுகின்றன. மேலும், 19 VHF (ஒயர்லாம்) கருவிகள் தயார் நிலையில் உள்ளன. தகவல்தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டால் பயன்படுத்த, 8991122611 என்ற எண்ணுடன் கூடிய செயற்கைக்கோள் தொலைபேசியும் (Satellite Phone) தயாராக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24x7 சுழற்சி முறையில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் மழையின்போது மக்களைப் பாதுகாக்க, 4 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 10 புயல் பாதுகாப்பு மையங்கள், அத்துடன் தற்காலிக நிவாரண மையங்களாகப் பயன்படுத்த 362 பள்ளிகள்/கல்லூரிகள், 146 திருமண மண்டபங்கள் மற்றும் 68 சமுதாய கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடலோரக் கிராமங்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில், 25 கடற்கரை கிராமங்களில் எச்சரிக்கை கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.

பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் கண்டறிதல் மற்றும் குழுக்கள் அமைப்பு

மாவட்டத்தில், மிக அதிகமாகப் பாதிக்கக்கூடிய 12 இடங்கள், அதிகம் பாதிக்கப்படக்கூடிய 33 இடங்கள், குறைந்த அளவு பாதிக்கக்கூடிய 80 இடங்கள் மற்றும் மிகக் குறைந்த அளவு பாதிக்கக்கூடிய 76 இடங்கள் என மொத்தம் 201 பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகளை விரைவுபடுத்த, 4500-க்கும் மேற்பட்ட முதல்நிலை பொறுப்பாளர்கள் அனைத்து வட்டங்களிலும் பயிற்சியளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு வட்டத்திலும் முன்னெச்சரிக்கை மற்றும் இடப்பெயர்வுக் குழு, தேடுதல் மற்றும் மீட்புக் குழு, தங்குமிடம் மற்றும் பராமரிப்புக் குழு என தலா 10 அனைத்து துறை அலுவலர்களைக் கொண்ட தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 4 வட்டங்களிலும் துணை ஆட்சியர்கள் தலைமையில் தலா 3 குழுக்கள் வீதம் மொத்தம் 12 தனித்தனி குழுக்கள் பணியில் உள்ளன.

மீட்பு உபகரணங்கள் தயார்

புயல் மற்றும் மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக அகற்றி இயல்பு நிலையை ஏற்படுத்திட ஏதுவாக, தேவையான உபகரணங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 133 ஜே.சி.பி. இயந்திரங்கள், 164 ஜெனரேட்டர்கள், 57 பவர் ஸா (Power Saw), 31 ஹிட்டாச்சி வாகனங்கள், 22 ஆயில் என்ஜின்கள், 40,351 மணல் மூட்டைகள், 84 மரம் அறுக்கும் கருவிகள், 34,110 சவுக்கு கம்பங்கள் மற்றும் 5870 கிலோ பிளீச்சிங் பவுடர் ஆகியவை அடங்கும்.

துறைரீதியான சிறப்பு ஏற்பாடுகள்

 * மீன்வளம்: 28 கடலோர மீனவ கிராம பஞ்சாயத்தாரை உள்ளடக்கிய வாட்ஸ்அப் (Whatsapp) குழு உருவாக்கப்பட்டுள்ளது. நன்கு நீச்சல் தெரிந்த 80 தன்னார்வலர்கள் செல்பேசி எண்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

* சுகாதாரம்: ஒவ்வொரு 5 வட்டாரத்திலும் சுகாதாரத் தேவைகளுக்காக 'விரைவுப் பதிலளிப்புக் குழு' (Rapid Response Team) ஏற்படுத்தப்பட்டுள்ளது. 3 நடமாடும் மருத்துவக் குழுக்களும், 108 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன. வெள்ளக் காலங்களில் நாய் மற்றும் பாம்பு கடியால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டி.டி (TD) தடுப்பூசி, ரேபிஸ் தடுப்பூசி (ARV) மற்றும் பாம்பு விஷ எதிர்ப்பு மருந்து (ASV) ஆகியவை போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

* கூட்டுறவுத்துறை: தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க 151 அங்காடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அத்துடன், மழைக்காலத் தேவைக்காக 20% கூடுதல் இருப்பு அங்காடிகளில் வைக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்தார். பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களுக்கு, நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் உடனடியாகச் சென்று தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார்.

மழை மற்றும் சேதம் தொடர்பான புகார்களுக்கு, பொதுமக்கள் மயிலாடுதுறை மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077 அல்லது 04364-222588 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சேகர், மாவட்ட வழங்கல் அலுவலர் அர்ச்சனா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.