கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிற்களுக்கு அரசு நிவாரணத்துடன், பயிர் காப்திபீட்டு நிறுவனங்கள் மூலம் உரிய இழப்பீட்டையும் பெற்றுத் தர திமுக அரசுக்கு வலியுறுத்தி அஇஅதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய வானிலை ஆய்வு மையம் 8-1-2024 அன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.




நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்போதைய கனமழையால் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதேபோல், மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு தினங்களாகக் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றும், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளன என்றும், சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழை நீரால் மூழ்கிவிட்டன என்றும், இதன் காரணமாக, விவசாயிகள் கவலையுடன் இருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.




மேலும், சீர்காழி நகரில் நான்கு நாட்களாகப் பெய்துவரும் கனமழையின் காரணமாக, மழை நீருடன் கழிவு நீரும் கலந்து செல்வதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும், இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் சூழ்ந்துள்ளதாகவும், வைத்தீஸ்வரன் கோயிலின் உள்ளே மழைநீர் புகுந்துள்ளதாகவும், இதனால் பக்தர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. திருவாரூரில் இரவு முழுவதும் பெய்த கனமழையால், அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் ஒரு அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி சூழ்ந்துள்ளதால் இங்கு சிகிச்சை பெற்று வரும் 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களை அருகிலுள்ள அரசு மருத்துமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.




இம்மாவட்டத்திலும் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழையில் மூழ்கி பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதாகவும், குறிப்பாக சிதம்பரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த, அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன என்றும் விவசாயப் பெருமக்கள் கவலையுடன் தெரிவித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வேளாண் பெருமக்கள் பெருமளவில் நெற்பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சாகுபடிக்காக செலவு செய்திருந்த நிலையில், சமீபத்திய கனமழையால் நெற்பயிர்கள் மழை நீரில் முளைவிடும் ஆபத்து ஏற்பட்டு உள்ளதாகவும், இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்திற்கு உள்ளாகும் நிலைமையை இந்த கனமழை ஏற்படுத்தி உள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.




எனவே, உடனடியாக கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வேளாண் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை அனுப்பி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட விளை நிலங்களை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 25,000 ரூபாய் நிவாரணமாக வழங்கவும், மேலும், பயிர் காப்பீட்டு மூலம் உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தரவும், மழை வெள்ளம் சூழ்ந்துள்ள சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருவாரூர் உள்ளிட்ட மக்கள் வசிக்கும் அனைத்து இடங்களிலும் மின் மோட்டர் வைத்து வெள்ள நீரை உடனடியாக அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.