மயிலாடுதுறை: தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்ட அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மாநில அளவிலான தரவரிசையில் 37-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு, கடைசிக்கு முந்தைய இடத்தைப் பிடித்துள்ளது பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தில் மயிலாடுதுறை

தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் மயிலாடுதுறை மாவட்டம் 37-வது இடத்தைப் பெற்றுள்ளது. மாவட்டத்தில் உள்ள 77 அரசுப் பள்ளிகளில் இருந்து மொத்தம் 4,570 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். இதில் 3,835 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் வெறும் 83.9% மட்டுமே பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 38 மாவட்டங்கள் உள்ள நிலையில், மயிலாடுதுறை 37-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது, அதாவது கடைசி இடத்திற்கு ஒரு இடம் மட்டுமே முன்னே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

100% தேர்ச்சி: 77-ல் வெறும் 9 பள்ளிகள் மட்டுமே சாதனை

அரசுப் பள்ளிகளின் தரம் குறித்து கேள்வி எழுப்பும் வகையில் மற்றுமொரு புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 77 அரசுப் பள்ளிகளில், வெறும் 9 பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன. மீதமுள்ள 68 பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது மாவட்டத்தின் கல்வித் தரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவைக் காட்டுகிறது.

Continues below advertisement

மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி நிலவரம்

அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்தையும் உள்ளடக்கிய மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதமும் கடந்த ஆண்டை விடச் சரிந்துள்ளது.

மொத்த தேர்ச்சி: 90.53% (கடந்த ஆண்டு 93.90%).

பின்னடைவு: கடந்த ஆண்டை விட 2.37% தேர்ச்சி குறைந்துள்ளது.

மாநில தரவரிசை: கடந்த ஆண்டு 23-வது இடத்தில் இருந்த மாவட்டம், இந்த ஆண்டு 10 இடங்கள் பின்தங்கி 33-வது இடத்தைப் பிடித்துள்ளது.

மாணவிகள் சாதனை: மாவட்டத்தில் மாணவிகள் 93.62 சதவீதமும், மாணவர்கள் 87.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அண்டை மாவட்டங்களின் அசுர வளர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தின் அண்டை மாவட்டமான தஞ்சாவூர், மாநில அளவில் 97.41% தேர்ச்சி பெற்று 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், அதே டெல்டா மண்டலத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை, அரசுப் பள்ளித் தேர்ச்சியில் 37-வது இடத்திற்குச் சென்றிருப்பது கல்வியாளர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அளவில் முதல் ஐந்து இடங்களை பிடித்த மாவட்டங்கள்

1.புதுக்கோட்டை - 97.57%

2.சிவகங்கை - 97.54%

3.தஞ்சை - 97.41%

4.திருச்சி - 97.31%

5.கன்னியாகுமரி - 97.30%

காரணங்களும் கோரிக்கைகளும்

அரசுப் பள்ளிகளின் இந்த வீழ்ச்சிக்குக் கற்றல் குறைபாடுகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை அல்லது மாணவர்களின் வருகைப் பதிவு குறைவு போன்றவை காரணங்களாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பின்தங்கிய நிலையில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குக் கூடுதல் கவனம் செலுத்தி, அடுத்த கல்வியாண்டிலாவது தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இதுபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளிலும் 36 அரசு பள்ளிகளில் வெறும் 2 பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில் இந்தத் தேர்வு முடிவுகள் மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. குறிப்பாகப் பின்தங்கிய நிலையில் உள்ள பள்ளிகளுக்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.