மயிலாடுதுறையில் நகை சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றி வந்த 16 வயது சிறுவன், சுமார் ஒன்றரை கிலோ எடையுள்ள தங்கக் கட்டியைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புகாரளிக்கப்பட்ட மூன்றே மணி நேரத்தில் துரிதமாகச் செயல்பட்ட காவல்துறையினர், சிறுவனைக் கைது செய்து தங்கத்தை மீட்டனர்.

Continues below advertisement

சம்பவம் நடந்தது என்ன?

மயிலாடுதுறை நகரின் முக்கியப் பகுதியான பேருந்து நிலையத்தின் பின்புறம் ஒரு தனியார் வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுகாஷ் என்பவருக்குச் சொந்தமான தங்க நகை சுத்திகரிப்பு மற்றும் தரம் பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு பிரபல நகைக்கடைகளில் இருந்து பழைய நகைகள் மற்றும் சிறு துண்டுகள் கொண்டு வரப்பட்டு, உருக்கப்பட்டு சுத்தமான தங்கக் கட்டிகளாக மாற்றப்படுவது வழக்கம். நேற்று வழக்கம்போல நகைக் கடைகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறு சிறு நகைகள் உருக்கப்பட்டு, சுமார் ஒன்றரை கிலோ எடை கொண்ட ஒரே தங்கக் கட்டியாக மாற்றப்பட்டது. இந்தத் தங்கக் கட்டியின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் இரண்டு கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

கண்ணிமைக்கும் நேரத்தில் திருட்டு

தங்கக் கட்டியை உருக்கி முடித்தவுடன், அதன் உரிமையாளர் சுகாஷ், அங்கிருந்த பணியாளரான மகாராஷ்டிராவைச் சேர்ந்த 16 வயது சிறுவனிடம் அதனைக் கொடுத்து சுத்தம் செய்து எடை போடுமாறு கூறியுள்ளார். அந்தச் சிறுவன் தங்கக் கட்டியைத் துணியால் துடைப்பது போலப் பாவனை செய்துள்ளார். உரிமையாளர் கவனிக்காத நொடியில், மின்னல் வேகத்தில் அந்தத் தங்கக் கட்டியை எடுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியே ஓடி மறைந்துள்ளார். திடீரென சிறுவன் தங்கத்துடன் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுகாஷ், உடனடியாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Continues below advertisement

காவல்துறையின் அதிரடி வேட்டை

இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பட்டப்பகலில் திருடப்பட்ட தகவல் கிடைத்தவுடன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் விரைந்து வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த அவர், குற்றவாளியைப் பிடிக்க உடனடியாக சிறப்பு புலனாய்வுத் தனிப்படை ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். காவல்துறையினர் வணிக வளாகத்தில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர். சிறுவன் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவன் என்பதால், அவன் ஊருக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்யலாம் என்ற கோணத்தில் அனைத்து எல்லைச் சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டன.

மூன்று மணி நேரத்தில் பிடிபட்ட சிறுவன்

தனிப்படையினர் நடத்திய தீவிரத் தேடுதல் வேட்டையில், மயிலாடுதுறையை விட்டு வெளியேற முயன்ற அந்தச் சிறுவன் மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே காவல்துறையினரிடம் சிக்கினான். அவனிடமிருந்த ஒன்றரை கிலோ எடையுள்ள தங்கக் கட்டியைப் போலீஸார் பத்திரமாக மீட்டனர். புகாரளிக்கப்பட்ட வெறும் மூன்றே மணி நேரத்தில் குற்றவாளியைக் கைது செய்த காவல்துறையின் செயல் பொதுமக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு

கைது செய்யப்பட்ட சிறுவன், சட்டப்படி மைனர் என்பதால், முறைப்படி குழந்தைகளுக்கான நீதிமன்றக் குழு (Juvenile Justice Board) முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார். நீதிபதியின் உத்தரவின்படி, அந்தச் சிறுவன் தஞ்சாவூரில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் (Observation Home) அடைக்கப்பட்டார்.

நிர்வாகத்தின் பாராட்டு

மிகக் குறுகிய காலத்தில் திறம்படச் செயல்பட்டு குற்றவாளியைப் பிடித்து, நகையை மீட்ட தனிப்படை காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

தங்கத்தை மீட்டுக் கொடுத்ததற்காக நகை சுத்திகரிப்பு நிலைய உரிமையாளர் சுகாஷ் மற்றும் உள்ளூர் நகை வியாபாரிகள் சங்கத்தினர் காவல்துறைக்குத் தங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். இச்சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் நேற்று பெரும் பேசுபொருளாக இருந்தது.

மேலும், நகைக்கடைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் பணிக்கு ஆட்களைச் சேர்க்கும் போது முழுமையான பின்னணித் தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.