நாகப்பட்டினம் மாவட்ட சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்களுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய இணையதளப் பதிவு குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் முக்கிய அறிவிப்பு ஒன்றை தனது செய்தி குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

நாகை: தமிழகத்தில் அரசு சார்பில் சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வசிக்கும் சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பெற்று வருகின்றனர்.

பல்வேறு உதவித்தொகைகள்

இச்சீர்மரபினர் நல வாரியத்தின் மூலம் விபத்து ஈட்டுறுதி திட்டத்தின்கீழ் உதவித்தொகையாக 1,50,500 ரூபாயும், இயற்கை மரணத்திற்கான உதவித்தொகையாக முப்பதாயிரம் ரூபாயும், ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகையாக ஐந்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கல்வி உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் முதல் பத்தாயிரத்திற்கும் உட்பட்ட தொகையும், திருமண உதவித்தொகையாக மூவாயிரம் ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாயும், மகப்பேறு உதவித்தொகையாக ஆறாயிரம் ரூபாயும், மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல் திட்டத்தின்கீழ் எழுநூற்று ஐம்பது ரூபாயும், முதியோர் ஓய்வுதியமாகப் பிரதி மாதம் ஆயிரத்து இருநூறு ரூபாய் வீதமும் பயனாளிகளுக்கு நேரடியாக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

Continues below advertisement

உதவிகளை பெற இருக்க வேண்டிய தகுதிகள் 

மேற்படி நலத்திட்ட உதவிகளைப் பெறத் தகுதியான நபர்களாகச் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களாகவும், பதினெட்டு வயது முதல் அறுபது வயது வரை நிறைவு பெறாதவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் குடும்பத்தில் ஒருவர் அதாவது அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி மற்றும் உடலுழைப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து மேற்குறிப்பிட்ட நலத்திட்ட உதவிகளைப் பெறத் தகுதி பெறுகின்றனர் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உறுப்பினர்களின் நலன் கருதி, வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்தல் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெறுதல் போன்ற நடைமுறைகளை மேலும் எளிதாக்கும் வகையில் பிரத்யேகமான https://tndcnwb.tn.gov.in இணையதளம் உருவாக்கப்பட்டுச் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் எவ்வித சிரமமுமின்றித் தங்களின் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பழைய உறுப்பினர்களுக்கும் பதிவு கட்டாயம் 

சீர்மரபினர் நல வாரியத்தில் ஏற்கனவே உறுப்பினர்களாகப் பதிவு பெற்றவர்களின் அனைத்து விவரங்களையும் புதிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உறுப்பினர்கள் தங்களின் சுய விவரங்களான உறுப்பினர்கள் அடையாள அட்டை நகல், அரசு அடையாள ஆவணத்தின் நகல் மற்றும் தற்போதைய நடப்பிலுள்ள மொபைல் எண் போன்ற அவசியமான விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு உடனே அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் தனது செய்திக்குறிப்பின் வழியாகத் தெரிவித்துள்ளார்கள்.

மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள் 

சீர்மரபினர் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் இந்த நலத்திட்ட உதவிகளைப் பெற நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களின் விவரங்களை விரைவில் பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.