மயிலாடுதுறையில் கடந்த 2003-ம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் விசிக தலைவர் திருமாவளவன் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆஜராகி கையெழுத்திட்டு சென்றார்.

  


2003 -ம் ஆண்டு நடைபெற்ற பேரணி


மயிலாடுதுறையில் மதமாற்ற தடைச்சட்டத்துக்கு எதிராக 2003-ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து, மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் இருந்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் பேரணி நடைபெற்றது. நெ.1 காமராஜர் சாலையில் பேரணி செல்வதற்கு அனுமதி பெறப்பட்டிருந்த நிலையில், பேரணியில் பங்கேற்றவர்கள் நெ.2 காந்திஜி சாலை வழியாக செல்ல முற்பட்டனர். 




காவல்துறையினருக்கும் விசிகவினருக்கும் இடையே மோதல் 


அப்போது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும், விசிகவினருக்கும் மோதல் உருவாகியது. மேலும், பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, அப்போதைய மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் மோகனவேல் அளித்த புகாரின்பேரில் பிரிவு 147, 148, 337, 307, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கலவரம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 42 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு விசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 


 




மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கு


இதுதொடர்பாக, மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு கடந்த ஜூலை 31 -ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் இதுநாள் வரை விசாரணைக்கு ஆஜராகாத தொல்.திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்தார். மத்திய அரசின் 3 சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இந்த வழக்கு தொடர்பாக விசிக தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யாததால் பிடியானை பிறப்பித்து உத்தரவு பிறப்பித்து. இவ்வழக்கினை ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.




பிடிவாரண்ட் பிறப்பிப்பு


அதனைத் தொடர்ந்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட அன்றைய தினம் எம்.பி திருமாவளவன் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றதால் வழக்கில் ஆஜராக முடியவில்லை என்று அவர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆகஸ்ட் 2 -ம் தேதி தாக்கல் செய்ததால் பிடிவாரண்டு உத்தரவை திரும்ப பெறும் மனுவை ஏற்ற நீதிபதி விஜயகுமாரி வருகின்ற ஆகஸ்டு 27 -ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிடிவாரண்ட் உத்தரவை திரும்ப பெற்றார்.




அதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்பாக முன்னதாக 18 பேர் ஆஜரான நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி நேற்று மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த நிலையில் அவர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகி தனது தரப்பு குற்றச்சாட்டை மறுத்துள்ளார். ஆர்.விஜயகுமாரி முன்பு மாலை ஆஜராகி நீதிமன்றத்தில் கையெழுத்து இட்டு சென்றார்.  மேலும் இந்த வழக்கு விசாரணையை நீதிபதி விஜயகுமாரி வழக்கு விசாரணை அடுத்த மாதம் செப்டம்பர் 11 -ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.




விடுதலைக் கட்சி தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான விசிக தொண்டர்கள் திரண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறை சார்பில் மோதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமலும், குறைவான காவலர்களே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் விசிக தொண்டர்களே கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். இதனை அடுத்து பலத்த தள்ளு முள்ளுக்கு இடையே காவல்துறையின் தடுப்புகளையும் மீறி விசிக தொண்டர்கள் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நுழைந்தனர். இதனால் சிறிது நேரம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.