மயிலாடுதுறையில் திருமண மண்டபம் ஒன்றில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில், மயிலாடுதுறை மாவட்ட திமுக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் நேற்று மாலை மே 15 -ம் தேதி அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என்.நேரு
இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வது, கள நிலவரம், நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது, களப்பணிகள் மீது நம் கழகத்தினர் கொண்டுள்ள ஈடுபாடு உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தார். மேலும், எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் நம் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவே ஆட்சி செய்யும் கழகத் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மீண்டும் அமைய இந்த மயிலாடுதுறை மாவட்டம் முக்கிய பங்காற்ற வேண்டும் என அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.
முக்கிய நிர்வாகிகள்
இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பொறுப்பு அமைப்பு மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், பூம்புகார் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மண்ணை சோழராஜன், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் இளையராஜா, சீர்காழி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராம்குமார், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் கிளை கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மாவட்ட செயலாளருக்கு எதிராக போர்க்கொடி
இந்நிலையில் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் கிட்டத்தட்ட பெரும்பாலான நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் நிவேதா.முருகனுக்கு எதிராக அமைச்சர் நேரு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் முன்பு குரல் எழுப்பயதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு எதிராக நிவேதா.முருகனின் ஆதரவாளர்களும் எதிர்க்குரல் எழுப்ப, கூட்டத்தில் கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டதாம்.
மாவட்ட துணை செயலாளர்கள் எதிர் எதிர் கருத்து
அப்போது கூட்டத்தில் பேசிய மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன்; இந்த மாவட்டத்தின் மீது முதல்வர் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். முதல்வரை மாப்பிள்ளையாக பெற்ற மாவட்டம் இந்த மாவட்டம். ஆனால், இங்கே நிலைமை எதுவும் நன்றாக இல்லை. நிர்வாகிகள் நன்றாக இல்லை. கட்சிக்காரனுக்கு மாவட்ட செயலாளர் எதுவுமே செய்யவில்லை. மாவட்ட செயலாளர் முன்னெடுத்துள்ள ஜாதி அரசியல் இங்கே கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் 3000 ஆயிரம் பேர் இணைப்பு விழா சென்னையில் நடந்த போது கூட இங்கிருக்கும் நிர்வாகிகள் பலரும் தலைமையிடம் புகார் சொல்லியிருக்கிறார்கள். இந்த நிலைமையில் சட்டமன்றத் தேர்தலை சந்தித்தால் நமக்கு அது சாதகமாக இருக்காது என பேசியதாகவும். அப்போது மாவட்டச் செயலாளர் நிவேதா.முருகனுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் இன்னொரு மாவட்ட துணைச் செயலாளர் செல்வமணி எழுந்து, ஞானவேலனை நோக்கி, மாவட்ட செயலாளரை பத்தி குறை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு நீ உட்காரு என குரல் எழுப்பியதாகவும் கூட்டத்தில் கலந்துகொண்ட சில நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அமைதி காத்த மாவட்ட செயலாளர்
அப்போது மாவட்ட செயலாளர் நிவேதா.முருகனுக்கு எதிரான ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலனுக்கு ஆதரவாக திரண்டு குரல் கொடுத்தனர். மாவட்டத் துணைச் செயலாளர் செல்வமணியோடு சில நிர்வாகிகள் சேர்ந்து கொண்டு நிவேதா.முருகனுக்கு ஆதரவாக திரண்டு இரு தரப்பினரும் மேடையை நோக்கி சென்று கடுமையான வார்த்தைகளால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையெல்லாம் பார்த்து மாவட்ட செயலாளர் நிவேதா.முருகன் செய்வதறியாது அமைதி காத்துள்ளார்.
சலசலப்பை தீர்த்து வைத்த அமைச்சர்
அப்போது இதனை கண்டு கோபமடைந்த அமைச்சர் கே.என்.நேரு மாவட்ட செயலாளருக்கு எதிர்ப்பான நிர்வாகிகள், ஆதரவு நிர்வாகிகள் என இரு தரப்பினரையும் கையைப் பிடித்து பின்னோக்கித் தள்ளி போய் உட்காருய்யா போய் உட்காருய்யா.. என சத்தம் போட்டு ஒரு வழியாக கூட்டத்தின் சலசலப்பை தீர்த்து வைத்தார். அடுத்த கணம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான மெய்யநாதனை பார்த்து மண்டல பொறுப்பாளரான அமைச்சர் கே.என்.நேரு, என்னங்க இதெல்லாம்? என கேள்ளி எழுப்பியுள்ளார். அப்போது மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சரான மெய்யநாதன், நிர்வாகிகள் மாவட்ட செயலாளருக்கு எதிரா கூறுவதெல்லாம் உண்மைதான் எனவும், நான் இதை பலமுறை அவரிடம் சொல்லிப் பார்த்து விட்டேன். ஒரு கட்டத்துக்கு மேல் எனக்கே மரியாதை இல்லை என்று வெளிப்படையாக நேரு முன்னிலையில் போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது.
அமைச்சர் நேரு ஆதங்கம்
இதற்குப் பிறகு பேசிய மண்டல பொறுப்பாளர் அமைச்சர் கே.என்.நேரு, நானும் எத்தனையோ மாவட்ட பஞ்சாயத்துகளை பார்த்திருக்கேன். ஆனால் மயிலாடுதுறை நிலைமைய பார்க்க ரொம்ப வருத்தமா இருக்கு. தேர்தல் நெருங்கும் நேரத்துல இவ்வளவு பேர் இவ்வளவு புகார்கள் சொல்வது கட்சி வளர்ச்சிக்கு ஏற்றதாக இல்லை. உடனடியாக இந்த விஷயத்தை தலைவருக்கு தெரியப்படுத்தி இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பேசி கூட்டத்தை முடித்தாக திமுகவினர் சிலர் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று மாலை கூட்டம் முடிந்த நிலையில், இன்று மே 16 -ஆம் தேதி அதிகாலை மயிலாடுதுறையில் இருந்து மாவட்ட செயலாளர் நிவேதா. முருகனுக்கு எதிரான சீனியர் நிர்வாகிகள் பலர் புதுக்கோட்டை சென்று அங்கே பொறுப்பு அமைச்சரான மெய்யநாதனை சந்தித்து பேசியதாக கூறப்படும் நிலையில் மயிலாடுதுறையில் திமுகவினர் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
நீண்ட கால குற்றச்சாட்டுகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கனவே மாவட்ட செயலாளர் நிவேதா.முருகன் மீது தொடர்ந்து பல புகார்களை தெரிவித்து வந்த நிலையில், குறிபாக அவர் சாதிய பாகுபாடு பார்த்து அரசியல் செய்வதாகவும் குற்றச்சாட்டு நிலவியது. இந்த தொடர் புகார்களில் இருந்து தன்னை காத்துக்கொள்ளும் விதமாகத்தான், கடந்த மே 6-ஆம் தேதி சென்னையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் திமுகவில் இணையும் விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நிவேதா.முருகன் நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. மேலும் அந்த கூட்டத்தில் சுமார் 300 பேர் தான் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள். மற்ற அனைவரும் ஏற்கனவே திமுகவில் இருப்பவர்கள் தான் என்று மற்ற நிர்வாகிகள் மூலமாகவும், உளவுத்துறை மூலமாகவும் முதலமைச்சருக்கு தகவல் கிடைத்தாகவும், இதனால் அவராக தேடி போய் மேலும் சிக்கலில் சிக்கி கொண்டதாக பேசப்பட்ட நிலையில் மீண்டும் நேற்றை ஆலோசனை கூட்டமும் அவருக்கு எதிராக திரும்பியுள்ளது குறிப்பிட்டக்தக்கது .