மயிலாடுதுறை மாவட்டம், அடியமங்கலம், பெரிய தெருவைச் சேர்ந்த 26 வயதான வைரமுத்து என்ற இளைஞர் காதல் விவகாரத்தில் நேற்று முன்தினம் இரவு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றம் செய்யப்பட்டு, காதலியின் தாயார் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

காதலுக்கு எதிரான படுகொலை

கடந்த செப்டம்பர் 15, 2025 அன்று இரவு 10 மணியளவில், அடியமங்கலம், பெரிய தெருவைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் வைரமுத்துவை அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வைரமுத்துவின் தாயார் ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஆறு நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். மயிலாடுதுறை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

10 ஆண்டு காதல்

விசாரணையில், கொலையுண்ட வைரமுத்து, அதே ஊரைச் சேர்ந்த தனது சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தது தெரியவந்தது. ஆனால், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். சமீபத்தில், அந்தப் பெண் வைரமுத்துவை பதிவுத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். பெற்றோரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், அவரது சகோதரர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து வைரமுத்துவைக் கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Continues below advertisement

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றம்

வைரமுத்துவின் கொலை தொடர்பாக, குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவரது உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான வைரமுத்துவின் காதலியின் தாயார் விஜயா (45) என்பவர், வைரமுத்துவின் சமூகத்தை சாராதவர் என்பதால், இவ்வழக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாற்றப்படும் என காவல்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த உறுதிமொழியை ஏற்று, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.

4 பேர் கைது

இந்த கொலை வழக்கில், குமார் என்பவரின் 21 வயதான மகன் குகன், அன்பரசன் என்பவரின் 19 வயதான மகன் அன்புநிதி, சோமு என்பவரின் 42 வயதான மகன் பாஸ்கர் மற்றும் குமார் என்பவரின் மனைவி 45 வயதான விஜயா என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் விஜயா, கொலை செய்யப்பட்ட வைரமுத்துவின் காதலியின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையின் இந்த விரைவான நடவடிக்கையும், உரிய சட்டப் பிரிவின் கீழ் வழக்கு மாற்றப்பட்டதும், வைரமுத்துவின் குடும்பத்தினருக்கும், அவரது சமூகத்தினருக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காதல் விவகாரங்களில் ஏற்படும் வன்முறைகளைத் தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.