விசிக ஆர்ப்பாட்டம் 


வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கிய சிபிசிஐடி காவல்துறையை கண்டித்தும், உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க கோரியும், தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரியும் ஆதிக்க சாதிவெறியர்களுக்கு துணை போகும் தமிழக காவல்துறையை கண்டித்தும் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கடந்த 10-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


முன்னாள் மண்டலச் செயலாளர் வேலு.குணவேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் செம்பனார்கோவில் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெய்சிங், ஸ்டாலின், சங்கை நவித், ராஜேஷ், ஆனந்த், கருணாநிதி, தலித் சிவா, அருள், தியாகு, அமிர்துவளவன், பாலா உள்ளிட்ட ஏராளமான ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  



திமுகவை கடுமையாக தாக்கி கிழித்து தொங்கவிட்ட விசிக பிரமுகர் - 2026இல் திமுக காலி என சபதம்


திமுகவை தாக்கி பேச்சு


ஆர்ப்பாட்டத்தின்போது கண்டன உரையாற்றிய முன்னாள் மண்டலச் செயலாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறுப்பாளரும், மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்க தலைவருமான வேலு.குணவேந்தன் திமுகவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இந்நிலையில் அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் மண்டலச் செயலாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறுப்பாளரும், மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்க தலைவருமான வேலு.குணவேந்தன் பேசியதாவது:


படுபாதக செயலை செய்த திமுக


விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்றைக்கு மக்களுக்காக போராடக்கூடிய ஒரு இயக்கம், அந்த இயக்கத்தை கொச்சைப்படுத்திவிட வேண்டும், அவர்களை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நயவஞ்சக களத்தின் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகம் அரசு இன்றைக்கு இந்த படுபாதக செயலை செய்துள்ளது என்று மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பில் குற்றம்சாட்டுகின்றோம். திமுக என்பது ஒட்டுமொத்தமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான இயக்கம் என்பதை பதிவு செய்கிறோம். தமிழ்நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக திமுக இருந்து வருகிறது என்பதற்கு உதாரணம்தான் இந்த வேங்கைவயல் விவகாரம்.




அமைச்சர் மெய்யநாதனின் உறவினர்கள்


வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலக்கிறான். அது யாரென்று தெரியும், அமைச்சர் மெய்யநாதனின் உறவினர்கள் என கூறுகின்றனர். அங்கு சென்று விசாரித்தபோது அங்குள்ளவர்கள் அமைச்சர் மெய்யநாதனின் உறவினர்கள் தான் அதனை செய்தார்கள் என அப்பகுதியில் கூறினர். அந்த செயலை செய்தவர்கள் அதிமுகவா, திமுகவா என்பது அதனை விசாரணை செய்த சிபிசிஐடி காவல்துறையினருக்கு நன்றாக தெரியும், ஆனால் உண்மை தெரிந்தும் தாழ்த்தப்பட்ட மக்கள்தானே இவர்களுக்கெல்லாம் யார் இருக்கிறார்கள் என்று எண்ணி புகார் கொடுத்தவர்களையை குற்றவாளியாக ஆக்கியுள்ளனர். முன்பெல்லாம் எஸ்சி, எஸ்டி சட்டத்தில் வழக்கு பதிவு செய்கிறார்கள் என்றால், எதிர் தரப்பில் கவுன்டர் பெட்டிஷன் போடுவார்கள், ஆனால் அதனை செய்யாமல் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் வன்கொடுமை கீழ் வழக்கு பதிவு செய்து அந்த வழக்கில் புகார் கொடுத்தவரின் உறவினரையை குற்றவாளியாக மாற்றி தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் வன்கொடுமை கீழ் வழக்கை நீர்த்துபோக வைக்கும் மாடல் இந்த திராவிட மாடல்.


ஆதிதிராவிடர்களுக்கு எதிரான மாடல்தான் திராவிட மாடல் 


திராவிட மாடல் என்பது ஆதிதிராவிடர்களுக்கு எதிரான மாடல்தான் இந்த திராவிட மாடலை தவிர வேறு ஒன்றும் கிடையாது. திராவிட மாடல் ஆட்சி 2026 -ல் 200 தொகுதிகளில் எப்படி வெற்றி பெறும், எப்படி முடியும் உங்களால்? தமிழ்நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட சமூகம், ஆதிதிராவிடர் சமூகம் உண்மையாக ஆண்ட பரம்பரையாக இருந்து பல பகுதிகளில் ஆளுமையை செலுத்திய சமூகம் இந்த ஆதிதிராவிடர் சமூகம். அப்படிபட்ட இந்த சமூகத்தை புறக்கணித்து விட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற முடியுமா? நீண்ட காலமாக எங்கள் தலைவர் கூட்டணியில் இருப்பதால் நாங்கள் மழுங்கிதான் இருந்தோம். ஆனால் இறுதியில் புகார் கொடுத்தவரையை குற்றவாளியாக மாற்றி இந்த சட்டத்தையை நீர்த்துப்போக செய்தால் அப்படிப்பட்ட அசிங்கப்பட்ட திராவிட மாடல் எங்களுக்கு வேண்டாம்.




உண்மையான சங்கிகள் திமுகதான்


ஆதிதிராவிடர்களை கொச்சைப்படுத்தும் திராவிட மாடல் இருக்குமானால், அந்த மானம் கெட்ட திராவிட மாடல் எங்களுக்கு வேண்டாம். இதற்காக நாங்கள் சங்கிலிகள், சங்கிகள் போன்று நாங்கள் பேசுவதாக கூறுவார்கள். ஆனால், உண்மையான சங்கிலிகள் திமுகதான். உண்மையான சமூகநீதியை பேசுபவர்களாக இருந்தால் திமுக இருந்தால் ஒன்றிய, மாவட்ட செயலாளர்களுக்கு 18 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தரவேண்டும், தருவார்களா? ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் திமுகவில் மாவட்ட செயலாளர்களாக இருப்பார்கள், எல்லா பொது தொகுதிகளிலும் அவர்களே வேட்பாளராக இருப்பார்கள். பொது தொகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள் எங்காவது வேட்பாளராக நிறுத்த பட்டுள்ளார்களா? உங்களுக்கு எதற்கு பொது தொகுதி உங்களுக்குதான் ரிசர்வ் தொகுதி வழங்கப்பட்டுவிட்டதே என கேவலமாக பேசும் இயக்கம் இந்த திராவிட முன்னேற்றக் கழகம். உங்களுக்கெல்லாம் வெற்றிபெற ஆள் கிடையாது ஏளனம் செய்வார்கள். 


விசிகவை கேவலப்படுத்திய இயக்கம் தான் திமுக


உங்களுக்கு ஒன்று இரண்டு சீட்டுகள் போதும், உங்களை யார் மதிக்க போறார்கள்? நீங்கள் எங்கே வெற்றிபெற போகிறீர்கள் என கேவலப்படுத்திய இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழக இயக்கம், இன்று கூட உங்களுக்கு ஆறு தொகுதிகள் கொடுத்துள்ளோம், முடிந்தால் இன்னும் ஒரு தொகுதியினை சேர்த்து கொடுத்தால் அவர்களுடன் நாங்கள் வருவோம் என்ற தவறான எண்ணம். அதன் அடிப்படையில் தான் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைச்சர் நிகழ்ச்சி ஒன்றில் ஆதிதிராவிடர் மக்களுடன் உணவு உண்ணுதல் என நிகழ்ச்சி நிரல் வெளியிட்டனர். அது தொடர்பான தான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக மாவட்ட செயலாளர் மீது புகார் அளித்தேன். அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தன்னை தொடர்பு கொண்டு, திமுக தலைமையில் இருந்து வந்த பதிவைதான் நான் எனது லட்டர்பேடில் பதிவிட்டேன் என தெரிவித்தார். மாவட்ட செயலாளர் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த திராவிட முன்னேற்றக் கழகம் ஆதிதிராவிடர்களுடன் உணவு உண்ணுவதை மிகப்பெரிய பெருமையான நிகழ்வாக கருதுகின்றனர். இந்த ஆதிதிராவிடர்களுடன் உணவு உண்ணும் நிகழ்ச்சியை வடிவமைத்ததே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைதான், அரசியல் செய்வதற்காக இவ்வாறு செய்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் கூட்டணில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. இருப்பினும் விசிகவை காட்டிலும் திமுக ஆதிதிராவிடர்களிடம் ஒன்றாக இருக்கிறோம், அவர்களுடன் உணவு உண்ணுகிறோம் என்ற மாயையை ஏற்படுத்த முயல்கின்றனர். இதுவெல்லாம் எங்களை வேதனையடைய செய்கிறது. 


வெற்றி கனவில் இருக்கும் திமுக


தமிழ்நாடு பெரும்பான்மையான சமூக ஆதிதிராவிடர் சமூகம், அந்த சமூகத்தை கொச்சை படுத்தும் நோக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து இதுபோன்று செயல்பட்டுமானால் வருகிற 2026 தேர்தலில் உங்களுக்கு எதிரான முடிவுகளை தரும், அந்த முடிவுகளை தருவதில்லை விடுதலை சிறுத்தைகள் கட்சியான நாங்களும் களம் காண்போம். நாங்கள் இதுநாள் வரை ஆதரித்துபோது நீங்கள் எவ்வளவே தவறு செய்தீர்கள், அவைகளை எங்கள் தலைவர் மறைந்து எங்களிடம் கூறினார். மாணவர், மகளிர் என நீங்கள் தரும் வெறும் ஆயிரம் ரூபாயில் வெற்றி பெற்றுவிடலாம் என தவறான கணக்கில் இருக்கின்றீர்கள், ஆயிரம் ரூபாய் லட்சமாக கொடுத்து ஓட்டை வாங்கிவிடலாம் என கனவு கண்டு வருகிறீர்கள்.


திமுகவை விசிக வீழ்த்தும் 


திமுக உண்மையில் சொன்னது எதையும் செய்யவில்லை, சொன்னது எதையும் செய்யாத அரசு இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு. இந்தியா முழுவதும் ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்கு பாதுகாப்பு இல்லை நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் வாருங்கள் எனக்கூறி ஆயிரம் காவல்துறையினரை பாதுகாப்பு நிறுத்தி ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு கூட்டம் நடத்த அனுமதி தந்த முதல் சங்கி திராவிட முன்னேற்றக் கழகம், அந்த திமுக நம்மை சங்கிகள் என கூறுகின்றனர். சங்கிகளுக்கு பாதுகாப்பே திமுகதான். அப்படிபட்ட திராவிட முன்னேற்றக் கழகம் வருகின்ற தேர்தலில் வீழ்த்தப்படும், வீழ்த்தப்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காரணமாக இருப்போம், எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை விசிகவிற்கு உள்ளது, வரலாற்று தலைகீழாக மாற்ற காத்துகொண்டு இருக்கிறோம். 2026 ஆண்டு தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வியை தழுவும் என கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறுப்பாளர் பேசியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.