விபத்து நேரிடும் அவசர காலங்களில் தற்காத்துக்கொள்ளும் முறை மற்றும் பாதிப்புகளை தடுக்கும் முறை குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஓஎன்ஜிசி ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுப்பட்டனர்.

Continues below advertisement

ஓஎன்ஜிசி நிறுவனம் 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் சேத்திரபாலபுரம் மெயின் ரோட்டில் ஓஎன்ஜிசியின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஒருங்கிணைந்த சேமிப்பு நிலையம் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணறுகளில் எடுக்கப்படும் எரிவாயு மற்றும் எண்ணெய் எண்ணெய் குழாய் வழியாக இங்கு ஒருங்கிணைக்கப் படுகிறது. அதனைத் தொடர்ந்து இங்கிருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் நரிமனம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 

Continues below advertisement

ஒத்திகை நிகழ்ச்சி 

இந்நிலையில் குத்தாலம் ஓஎன்ஜிசி எண்ணெய் எரிவாயு சேகரிப்பு நிலையத்தில் அவசர காலங்களில் விபத்து நேரிட்டால் தற்காத்துக்கொள்ளும் முறை மற்றும் பாதிப்புகளை தடுக்கும் முறை குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஓஎன்ஜிசி நடத்திய ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 

3-வது நிலை விபத்து 

விபத்தின் 1 மற்றும் 2-வது நிலையை கடந்து, பெரிய அளவிலான அபாயம் என்கிற 3-வது நிலைக்கு சென்றுவிட்டால் நிறுவனத்தின் மற்ற பணி மையங்களின் உதவியைத் தாண்டி, உள்ளூர் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், அருகில் இருக்கும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் இருந்து உதவி கோரி அவர்களின் பரஸ்பர ஒத்துழைப்புடன் அவசரநிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, சரிசெய்வது குறித்து இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் செயல்விளக்கம் தத்ரூபமாக செய்து காட்டினர். 

இந்த ஒத்திகையின் போது குத்தாலம் சேகரிப்பு நிலையத்தில் ஏற்கெனவே இருக்கின்ற தீயணைப்பு வாகனம் மற்றும் வசதிகள் போதாது என்கிற நிலையில் ஓஎன்ஜிசி-யின் இதர நிலையங்களில் இருந்து இரண்டு தீயணைப்பு வண்டிகளும், குத்தாலத்தில் இருந்து அரசு தீயணைப்பு வண்டி ஒன்றும் உடனடி உதவிக்கு வந்தன. ஓஎன்ஜிசி-யின் ஆம்புலன்ஸ் வண்டிக்கு உதவியாக குத்தாலம் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் சில நிமிடங்களில் உதவிக்கு வந்தது. 

பல்வேறு துறையின் பங்களிப்பு 

காவேரி அஸட்டின் செயல் இயக்குநர் உதய் பஸ்வான், அசெட் சப்போர்ட் மேனேஜர் மாறன் ஆகியோரின் வழிகாட்டுதலோடு நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, துணை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி முன்னிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருவாய்த்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகள் பங்கேற்று இந்த ஒத்திகையின் போது தங்களது பங்களிப்பை வழங்கினர்.

பதற்றமான சூழ்நிலை உருவாக்கிய ஓஎன்ஜிசி 

பொதுமக்கள், செய்தியாளர்கள் மற்றும் வெளிநபர்களுக்கு யாரும் அனுமதி இல்லாத நிலையில், பொதுமக்களுக்கும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நடைபெற்ற இந்த ஒத்திகையால் குத்தாலத்தில் சேத்திரபாலபுரம் ஓஎன்ஜிசியின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஒருங்கிணைந்த சேமிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதியில் உள்ள மக்கள் மூன்று தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ்கள் அடுத்து அடுத்து செல்ல ஏதும் பெரும் விபத்து ஏற்பட்டு விட்டாதாக எண்ணி மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இதனால் வயதானவர்கள் மற்றும் இதய நோயாளிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், இதுபோன்ற அச்சப்படும் வகையிலான ஒத்திகை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னர் அருகில் இருக்கும் மக்களுக்கு இதுகுறித்த தகவலை வழங்க வேண்டும். இல்லையெனில் நிஜமாக விபத்து ஏற்பட்டுவிட்டது என எண்ணி வயதானவர்களும், இதய நோயாளிகளும் பாதிக்கப்படுவார்கள் எனவும் இதனை கருத்தில் கொண்டு நிகழ்சி ஏற்பாட்டாளர்கள் செயல்பட வேண்டும் என்றனர்.