மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 19-இல் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ஒரே இடத்தில் தங்கு தடையின்றி அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யவும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சிறப்பு முகாம் வரும் 19.08.2026 (புதன்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இத்தகவலை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தனது அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

ஒரே இடத்தில் அனைத்து அரசுச் சேவைகள்

சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு பல்வேறு அரசு அடையாளச் சான்றுகளும், நலத்திட்ட உதவிகளும் கிடைப்பதில் உள்ள சிரமங்களைக் களையும் நோக்கில் இந்த ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பல்வேறு அரசு அலுவலகங்களுக்குச் சென்று பெற வேண்டிய முக்கியச் சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை, ஒரே கூரையின் கீழ் பெற இம்முகாம் வழிவகை செய்கிறது.

இச்சிறப்பு முகாமில் திருநங்கைகளுக்காக வழங்கப்படவுள்ள முக்கியச் சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளின் விபரம் பின்வருமாறு;

திருநங்கைகள் நல வாரிய அடையாள அட்டை: தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைக்கான புதிய பதிவுகள் மேற்கொள்வதுடன், ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கான அட்டைகளும் வழங்கப்படும்.

ஆதார் அட்டை திருத்தங்கள்: ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பாலின மாற்றம் மற்றும் பிற விவரங்களில் திருத்தங்கள் மற்றும் சேர்க்கைகளை உடனடியாக மேற்கொள்வதற்கான வசதிகள்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள்: ஏழை எளிய மக்களின் மருத்துவச் செலவைக் குறைக்கும் 'முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' மற்றும் மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்திற்கான புதிய காப்பீட்டு அட்டைகள் வழங்குதல்.

வாக்காளர் மற்றும் குடும்ப அட்டைகள்: ஜனநாயகக் கடமையாற்றத் தேவையான வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற உதவும் மின்னணு குடும்ப அட்டை (Ration Card) பெற தேவையான ஆவணப் பரிசீலனைகள் மற்றும் புதிய அட்டைகள் வழங்குதல்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்

இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள அறிக்கையில், "மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகள் அனைவரும் தங்கள் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசு வழங்கும் இத்தகைய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முகாமிற்கு வரும் திருநங்கைகள் தங்களின் தற்போதைய அடையாளச் சான்றுகள், புகைப்படங்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் வருகை தந்து, தங்களுக்குத் தேவையான அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளையும் உடனடியாகப் பெற்றுப் பயன்பெற வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இச்சிறப்பு முகாமிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் கட்டமைப்பு ஏற்பாடுகளையும் மயிலாடுதுறை மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் திரளாகப் பங்கேற்று இம்முகாமினை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், தெரிவித்துள்ளார்.