கடற்கரை பிரியர்களின் சொர்கம்.. ‘டிராங்கெபார் எனும் தரங்கம்பாடி..

Continues below advertisement

17ஆம் நூற்றாண்டில் உலகம் முழுக்க மசாலா, பட்டு, வஸ்திரம் வாங்க ஐரோப்பிய நாடுகள் இந்திய கடற்கரைக்கு வரிசைகட்டி வந்துகொண்டிருந்த காலம். போர்சிகீசியர்கள், டச்சு, ஆங்கிலேயர் எல்லாம் பெரிய பேரரசுகளை அமைத்திருந்த நிலையில், ஒரு சிறிய ஐரோப்பிய நாடான டென்மார்க்கும் தன்னுடைய தடத்தை இந்தியாவில் பதிக்க கூடவே வந்தது.அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் தற்போது மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நம்முடைய தரங்கம்பாடி. பல நூற்றாண்டுகள் பழமையான சிவன் கோயிலை தாங்கிய இந்த அமைதியான கடற்கரை நகரம், ஒரு பெரிய மீனவ கிராமமும் கூட. 1620ல் ஒரு ஒப்பந்தத்துக்குப் பிறகு டிராங்கெபார் என மாற்றமடைந்து, அடுத்த இருநூற்றாண்டுகளுக்கு டானிஷ் காலனியாக பிரபலமானது.

 டென்மார்க் ஏன் இந்தியாவுக்கு வந்தது?

Continues below advertisement

அந்த நேரத்தில் இந்திய மசாலா, துணி என்றாலே ஐரோப்பியர்கள் கண் கலங்கும் அளவுக்கு தேவை அதிகம். அதனால் டென்மார்க் அரசரான கிறிஸ்டின் IV “நாமும் நேரடி வியாபாரம் செய்வோம்” என்று முடிவெடுத்தார். அவர்களது பிரதிநிதிகள் போராட்டம் இல்லாமல் நெறியாக தஞ்சாவூர் நாயக்கரிடம் வந்து சந்தித்தனர். நாயக்கரின் அனுமதியால் பிறந்த டிராங்கெபார் தஞ்சாவூர் நாயக்கரான ரகுநாத நாயக்கர், நல்லெண்ணத்தின் அடையாளமாக தரங்கம்பாடியை டானிஷ் வணிகத்துக்கு ஒப்பந்தமாக வழங்கினார். டானிஷ் அதிகாரிகள் இந்தப் பெயரை உச்சரிக்கச் சிரமப்பட்டதால் அதை “டிராங்கெபார்” என மாற்றி அழைக்கத் தொடங்கினர். இதுவே இந்திய வரலாற்றில் ஒரு தனிச்சிறப்பு டானிஷ் குடியேற்றம் போரால் இல்லை, அரச அனுமதி அடிப்படையில் உருவானது.

ஒரு மீனவக் கிராமத்திலிருந்து சர்வதேச துறைமுகம் வரை டானிஷ் ஆட்சியின் கீழ் டிராங்கெபார் படிப்படியாக வளர்ந்து, உலகம் முழுவதும் இருந்து வணிகர்கள் வரும் ஒரு பரபரப்பான துறைமுகமாக மாறியது. இந்த சமயத்தில்தான் கடற்கரையோரம் இன்னும் பெருமையாக நிற்கும் டான்ஸ்பார்க் கோட்டை கட்டப்பட்டது.

டிராங்கெபார்-  தரங்கம்பாடியின் அதிசய மாற்றம்

டானிஷ் கோட்டை, முதல் பெண்கள் பள்ளி, ஜீகன்பால்க் மரபு எல்லாம் ஒரே நகரில் தமிழக கடற்கரையில் அமைதியாக இருந்த ஒரு மீனவக் கிராமம்… ஆனால் 17ஆம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை வரலாற்றின் தடங்களை அழகாக தாங்கிக் கொண்டிருக்கிறது. அது நம்முடைய தரங்கம்பாடி, ஐரோப்பியர்களால் டிராங்கெபார் என அழைக்கப்பட்ட ஊர். சினிமா மாதிரி நடந்த உண்மை சம்பவங்களால் இந்த ஊர் இன்று சுற்றுலா தலம், ஷூட்டிங் ஸ்பாட், கல்வி வரலாற்றின் அடையாளம், என பல முகங்கள் கொண்ட பிரபலமான இடமாக மாறியுள்ளது.

டென்மார்க்காரின் வருகை,  தரங்கம்பாடி எப்படி டிராங்கெபார் ஆனது?

1620-ல் தஞ்சாவூர் நாயக்கரான ரகுநாத நாயக்கர், டானிஷ் வணிகர்களுக்கு தரங்கம்பாடியை வழங்கிய ஒப்பந்தம், இந்த ஊரின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது. போரால் அல்ல, அரச அனுமதி அடிப்படையில் உருவானது என்பதுதான் டிராங்கெபாரின் தனிச்சிறப்பு. டானிஷ் மக்கள் “தரங்கம்பாடி” என்ற பெயரை உச்சரிக்க முடியாமல், அதை அவர்களின் வசதிக்கேற்றபடியாக “Tranquebar” என்று மாற்றினர். அதிலிருந்து இந்த கடற்கரை ஊர் ஐரோப்பிய தாக்கத்துடன் ஒரு முக்கிய துறைமுக நகரமாக வளரத் தொடங்கியது. டான்ஸ்பார்க் கோட்டை – டிராங்கெபாரின் கண்காட்சி அடையாளம் கடற்கரையில் ராணுவ வீரரைப் போல நின்று கொண்டிருக்கும் டான்ஸ்பார்க் (Dansborg) கோட்டை, டானிஷ் ஆட்சியின் வாழும் சாட்சியமாக உள்ளது. இது உலகில் உள்ள மிகப் பெரிய டானிஷ் கோட்டைகளில் இரண்டாவது கோட்டை இதுவாகும்.

தரங்கம்பாடியின் ஸ்பெஷல்..

2004 சுனாமியிலும் கூட நிலை குலையாமல் இருந்தது இந்தக் கோட்டை. தற்பொழுது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. வரலாற்று பிரியர்களுக்கு மிகச்சிறந்த இடம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இடமாக, குறைந்த செலவில் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது. பெரிய பெரிய பாறை கற்கள் கொட்டப்பட்டு அமர்ந்து பேச, குழந்தைகளுடன் குதிரை சவாரி செய்ய, கடல் உணவு பிரியகளுக்கு சிறந்த உணவகங்கள் என இருப்பதால் இது பலவிதமான ரசனை உள்ள சுற்றுலா பயணிகளையும் திருப்தி படுத்தும் விதாமாக இருக்கும்.

இன்னுமும் பழமையான கட்டிட கலைகளை பறைசாற்றும் கட்டிடங்கள் மேலும் கடற்கரையை நோக்கி செல்லும் தெருக்களை அழகாக காட்டும். உதயநிதி, சேரன், ஸ்ரீகாந்த் என பல ஹீரோக்கள் இந்த தெருக்களில் டூயட் பாடி உள்ளனர். பல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களும் இங்கே ஷூட் செய்யப்பட்டுள்ளதால், இது திரையுலகத்தின் பிரபலமான ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறியுள்ளது.

பெண் கல்விக்கு பெரும்பங்கு

அடுப்படியில் புழுங்கிகிடந்த பெண்களுக்கு கல்வியை கொடுத்து சிறகடிக்க செய்த இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளி இங்கு உள்ளது. டிராங்கெபாரின் பெருமை நாட்டின் கல்வி வரலாற்றில் டிராங்கெபார் ஒரு முக்கிய இடம் பெற காரணம். பல லட்சம் ஏழை பெண்கள் கல்வி பெற இந்த பள்ளியே காரணம். இதன் பின்னணியில் இருந்தவர் ஜெர்மன்-டானிஷ் மிஷனரியான பார்தலோமியஸ் ஜீகன்பால்க் (Ziegenbalg). அவர் 1706ல் தரங்கம்பாடிக்கு வந்து, பெண்கள் கல்வி அவசியம் என்பதை உணர்ந்து, பள்ளியைத் தொடங்கினார்.

அது மட்டும் அல்ல இந்தியாவின் முதல் தமிழ் பைபிள் மொழிபெயர்த்தார், இந்தியாவின் முதல் அச்சுக்கழகத்தை தொடங்கினார். தமிழ் மொழியையும் தமிழக மக்களையும் ஆழமாக நேசித்தார். பெண்களும் கல்வி பெறவேண்டும் என்ற முன்னோடி சிந்தனை கொண்டிருந்தார். டிராங்கெபாரில் இன்று இருக்கும் ஜீகன்பால்க் அருங்காட்சியகம், அவரது பணிகளை அற்புதமாக காட்டுகிறது.

சுற்றுலா, வரலாறு, கலாச்சாரம் எல்லாம் ஒரே இடத்தில் 

தற்பொழுது டிராங்கெபார் பல காரணங்களால் சுற்றுலா பிரியர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது. கோட்டையுடன் கொண்ட கடற்கரையை காணவும், கன்னியாகுமரியை போல சூரிய உதயத்தை காணவும் மக்கள் அதிகம் வருகின்றனர். கிழக்கு சீகன் பாங்குகள்,  ஜீகன்பால்க் பணியாளர் இல்லம் மற்றும் பழைய கட்டிடங்களில் காண்பதற்கு பல ஆச்சரியாமான விஷயங்கள உள்ளன. எழுநூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட மசிலாமணி நாதர் கோவில் பக்திமான்களுக்கு சிறந்த இடம். அமைதியான தெருக்கள் ‘ரீல்ஸ்’ பிரியர்களுக்கு ‘செம ஸ்பாட்’.

பழைய டானிஷ் வீடுகள்,  ஐரோப்பிய நகரங்களை ஒத்த தெருக்களின் அழகு ஒருபுறம், தமிழ் பாரம்பரியம் மறுபுறம் என அருகருகே பல கலவையான கலாச்சார ஒற்றுமையையும், வரலாறையும் சொல்லும் நகரம் ‘டிராங்கெபார்’. இது ஒரு சுற்றுலா தலம் மட்டுமல்ல. கல்வியின் மூலம் கண் திறந்து பெண்களுக்கு வாய்ப்பு வழங்கிய முதல் முயற்சியை, மதப்பணியின் வரலாற்றை, கடலைக் காக்கும் கோட்டையைக் காட்டும் ஒரு அருங்காட்சியக நகரம் இந்த தரங்கம்பாடி. இங்கு அற்புத ஊருக்கு வரும் உங்களுக்கு இது சத்தியம் செய்து கொடுக்கப்படும். ‘கடல் அலைகளின் சத்தத்தில் உங்கள் காதுகளில் வரலாறு கிசுகிசுப்பதாக உணர்வீர்கள்’.