புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் தரங்கம்பாடி கடற்கரைக்கு வரும் பொது மக்கள் மற்றும் சுற்றுலா வாசிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல்
சென்னைக்கு 110 கிமீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 13 கிமீ வேகத்தில் ஃபெஞ்சல் புயல் கரையை நோக்கி நகருகிறது. இதனால் ஃபெஞ்சல் புயல் இன்று மாலையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. கனமழையை எதிர்கொள்ளும் விதமாக தமிழ்நாடு அரசு தொடர் ஆய்வுகளை நடத்தி அனைத்து துறை சார்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துள்ளது. மேலும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனைத்து நிலவரங்களையும் கண்காணித்து வருகிறோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை
புயல் எச்சரிக்கை மற்றும் பலத்த மழை காரணமாக, வேளச்சேரி மேம்பாலத்தில் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்து வருகின்றனர். இந்தப் புயல் சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் கொங்கு மண்டலம் வழியாகப் பயணிக்க வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. புயல் கரையைக் கடப்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் எச்சரிக்கை மற்றும் பலத்த மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆந்திர பேரிடர் மீட்புக் குழுவினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
வாழ்வாதாரம் இழந்த மீனவர்கள்
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 21 -ம் தேதி முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. அதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்து வருகிறது. மேலும் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
விபரீதம் அறியாத பொதுமக்கள்
இதனிடையே தமிழ்நாட்டில் புயல் சின்னம் உருவாகி இன்று மாலை அல்லது நாளை காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் அச்சம் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் வெளியில் வராமல் உள்ளனர். தற்போது தரங்கம்பாடி கடற்கரையில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், தரங்கம்பாடி கடற்கரையில் புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இன்று வெளிநாட்டவர்கள் உட்பட 50 -க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் திரண்டு புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் குழந்தையுடன் விளையாடியும் மகிழ்ந்தனர்.
காவல்துறையினர் எச்சரிக்கை
இச்சம்பம் அறிந்த பொறையார் காவல் நிலைய காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தற்போது கோட்டைக்கு செல்லும் பிரதான முகப்பு வாயில் முன்பு பேரி கார்டுகளை வைத்து பொதுமக்கள் புயல் கரையை கடக்கும் வரை கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.