மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி இல்லத்திருமண நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழீழப் பிரச்சனை, தமிழ்நாட்டில் வட இந்தியர்களின் வருகை, மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

தனித்தமிழீழம் மற்றும் நீதி விசாரணை

தமிழீழ மண்ணில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களப் பேரின அரசின் இனப்படுகொலைக்கு நீதி விசாரணை வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தினார். மேலும், உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி தனித்தமிழீழம் பெற்றுத்தர முதலமைச்சர் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். 40 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, ஐக்கிய நாடுகள் சபை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

வட இந்தியர்களின் வருகை

தமிழ்நாட்டில் வட இந்தியர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருந்து தற்போது கோடிக் கணக்கில் அதிகரித்துள்ளதாக வேல்முருகன் குற்றம் சாட்டினார். சுமார் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட தமிழரல்லாதவர்கள், குறிப்பாக இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் நீக்கமற நிறைந்திருப்பதாக அவர் தெரிவித்தார். 2014-ல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்திக்காரர்களைத் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்து, தலைமைச் செயலாளர் தலைமையில் அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கான குடும்ப அட்டை, ரேஷன் அட்டை, மற்றும் வாக்காளர் அட்டை வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

"ஒரே நாடு, ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம்" என்ற ஒற்றைக் கொடியின் கீழ் நரேந்திர மோடி இந்தியாவில் ஆட்சி செய்ய விரும்புகிறார் என்றும், இந்தியா பல்வேறு மொழி தேசிய இனங்களைக் கொண்ட பன்முகத்தன்மை வாய்ந்த பூமி என்றும் அவர் குறிப்பிட்டார். மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரக் கும்பல்களின் திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி நிறைவேற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

வாக்காளர் பட்டியல்

திட்டமிட்டு, தற்போது சுமார் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட வட இந்தியர்கள், தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொள்ளாதவர்களை 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கக்கூடிய சூழல் இருப்பதாக வேல்முருகன் தெரிவித்தார். பீகாரில் நீக்கப்பட்ட 60 லட்சம் வாக்காளர்களில், ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது ஒரு "பேரிடி" என அவர் குறிப்பிட்டார்.

தடுப்பு நடவடிக்கைகள்

இந்த நிலையைத் தடுத்து நிறுத்த, வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது "ஸ்டேட் என்ட்ரி பர்மிட்" என்ற முறையைக் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தினார். இது அசாம், மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து போன்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதாகவும், அதே போல் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். வட இந்தியர்களின் வருகையைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் தமிழ் மொழி, கலாச்சாரம், மற்றும் அதன் பன்முகத்தன்மை அழியும் என்றும் அவர் எச்சரித்தார்.

சி.பி. ராதாகிருஷ்ணன் குறித்த கேள்வி

பாரதிய ஜனதா கட்சி ஒரு "மனித குல விரோத கட்சி" என்று கூறிய வேல்முருகன், அந்த கட்சியில் இருந்து கொண்டு தமிழராக இருக்கிறார் என்பதற்காக, துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் நடிகர் விஜய்

சென்னையில் போராடிவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். நடிகர் விஜய் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "சினிமா நடிகர்கள் குறித்த கேள்விக்கு நான் பதிலளிப்பதில்லை" என்று அவர் பதிலளித்தார். சினிமாவிலிருந்து நேரடியாக தமிழகத்தின் இருக்கைக்கு வருவோம் என்று வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்களை தமிழர்களில் ஒரு பிரிவினர் ஆதரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் யாருக்கு வாய்ப்பு வழங்குவார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.