மயிலாடுதுறை தனியார் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வன் தொடக்க விழாவில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 1000 ரூபாய் பணத்தை மாணவர்கள் உடனடியாக எடுத்துக்கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.


தமிழ்ப் புதல்வன் திட்டம் 


தமிழக முழுவதும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று துவங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் பகுதியில் உள்ள ஏவிசி பொறியியல் கல்லூரியில் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மாதம் 1000 ரூபாய் வழங்கும் "தமிழ்ப் புதல்வன்" துவங்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன் ,ராஜ்குமார், பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு வங்கி அட்டைகளை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தனர். இந்தத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 2837 மாணவர்கள் பயன் பெறுகின்றனர். பின்னர் அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 1000 ரூபாய் பணத்தை மாணவர்கள் உடனடியாக பெற்றுக்கொண்டதை மாவட்ட ஆட்சியர் தலைமையில்  பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 




மாவட்ட ஆட்சியர் பேச்சு 


முன்னதாக மாணவர்களிடம் சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறிய போது, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையேட்டில் இந்தியாவில் இருக்கக்கூடிய உயர்கல்வி வாய்ப்புகள், உலக நாடுகளின் ஆராய்ச்சிகள், முப்படை துறைகள் உட்பட்ட பல்வேறு வகையான மாணவர்கள் முன்னேற்றத்திற்கான வழிகாட்டிகள் இடம் பெற்று இருப்பதாகவும். இதனை மாணவர்கள் பின்பற்றி சாதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 




அரசியல் குறித்து மாவட்ட ஆட்சியர் கருத்து 


இந்த கையேட்டில் அரசியல் மட்டும் இல்லை எனவும், அதை யாராலும் கற்றுக் கொடுக்க முடியாது. அரசியலமைப்பாளர்களுடன் பழகும் போது தான் அதை நாம் கற்றுக் கொள்ள முடியும் என நகைச்சுவையாக கூறினார்.  அரசியலில் எல்லோரும் ஜெயிக்க முடியாது என்றும், மிகவும் கடினமான ஒன்றுதான் அரசியல் எனவும் தெரிவித்தார். தொழில் தொடங்குவது கூட எளிது என்றும், ஆனால் அரசியல் நடத்துவது ரொம்ப கடினம் தான் எனவும் தெரிவித்தார். இதனைக் மேடையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக பிரமுகர்கள் புன்னகை முகத்துடன் சிரித்தனர். 




நகைச்சுவையாக பேசியதாக விளக்கம் 


நல்ல தலைவர்களை தேர்ந்தெடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு அரசியல் முக்கிய பங்காற்றுகிறது எனவும், நாமும் அரசியலில் முன்னேறி வரலாம் எனவும் தெரிவித்த நிலையில்  நகைச்சுவைக்காக தான் கடினம் என தெரிவித்தேன் என ஆட்சியர் கூறினார். மேலும் நாம் செய்யும் தொழிலை மற்றவர்களிடம் கொடுக்கலாம் ஆனால் அரசியலை கொடுக்க முடியாது எனவும் தெரிவித்தார். இறுதியாக நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை மாணவர்களுக்காக மட்டுமே தெரிவித்தேன் என சிறித்த முகத்துடன் கூறினார்.




நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்கள் 


இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட சமூகநல அலுவலர் சுகிர்தா தேவி, மகளிர் திட்ட அலுவலர் செந்தில்குமரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமல்ராஜ், முன்னோடி வங்கி மேலாளர் லியோ, மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் என்.செல்வராஜ், குத்தாலம் ஒன்றியக்குழுத்தலைவர் கே.மகேந்திரன், சீர்காழி நகர்மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி, மணல்மேடு பேரூராட்சித்தலைவர் கண்மணி, குத்தாலம் பேரூராட்சித்தலைவர் சங்கீதா மாரியப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சமூகநலத்துறை தீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.