மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக ஆண்டுதோறும் ஜூலை மாதம் 18-ஆம் நாளன்று "தமிழ்நாடு நாள் விழா" மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில், எதிர்வரும் 15.07.2026 (புதன்கிழமை) அன்று மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

Continues below advertisement

இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பெரும் தொகையுடனான பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தனது செய்திக்குறிப்பு வாயிலாக தெரிவித்துள்ளார்.

போட்டி நடைபெறும் இடம் மற்றும் நேரம்

இப்போட்டிகள் அனைத்தும் வருகின்ற 15.07.2026 புதன்கிழமை அன்று, மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளன. அன்றைய தினம் காலை 9.00 மணிக்கு போட்டிகள் துவங்க உள்ளதால், பங்கேற்க விரும்பும் மாணவர்கள் உரிய நேரத்திற்குள் வருகை தந்து தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Continues below advertisement

பங்கேற்பதற்கான தகுதிகள் மற்றும் வழிமுறைகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.தகுதி:6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் மட்டும் இப்போட்டிகளில் கலந்து கொள்ளத் தகுதியானவர்கள் ஆவர்.

முக்கிய நிபந்தனை: இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள், தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் இருந்து முறைப்படியான பரிந்துரைக் கடிதம் (Bonafide Certificate) பெற்று, அதனைப் போட்டி நடைபெறும் நாளன்று சமர்ப்பிக்க வேண்டும். பரிந்துரைக் கடிதம் இல்லாத மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

போட்டிகளுக்கான தலைப்புகள்

மாணவர்களின் சிந்தனைத் திறனையும், தமிழ் மொழியாற்றலையும் வளர்க்கும் விதமாகத் தமிழ்நாடு நாள் விழாவை ஒட்டிப் பின்வரும் தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. கட்டுரைப் போட்டித் தலைப்பு: "தமிழ்நாடு – கருவானது முதல் உருவானது வரை"

2. பேச்சுப் போட்டித் தலைப்புகள் (ஏதேனும் ஒரு தலைப்பில் பேசலாம்)1.நான் விரும்பும் தமிழ்நாடு2. அன்றைய மெட்ராஸ் மாகாணம் - இன்றைய நவீன தமிழ்நாடு3. இளைஞர்களின் பார்வையில் தமிழ்நாடு4.கல்வியில் சிறந்த தமிழ்நாடு5. வீரம் செறிந்த தமிழ்நாடுகுறிப்பு: மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தலைப்புகளில் தங்களது ஆழமான கருத்துகளையும், வரலாற்றுத் தரவுகளையும் நயம்பட எடுத்துரைக்க வேண்டும் எனத் தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு வழங்கும் அள்ளிக் கொடுக்கும் பரிசுத் தொகைகள்!

மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் நடுவர்களால் சிறந்த முறையில் தேர்வு செய்யப்படும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பின்வருமாறு ரொக்கப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

முதல் பரிசு - ரூ. 10,000/- அரசு பாராட்டுச் சான்றிதழ் 

இரண்டாம் பரிசு - ரூ. 7,000/- அரசு பாராட்டுச் சான்றிதழ் 

மூன்றாம் பரிசு - ரூ. 5,000/- அரசு பாராட்டுச் சான்றிதழ் 

ஆட்சியரின் அழைப்பு

"தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, தியாகங்கள் மற்றும் சாதனைகளை இன்றைய இளைய தலைமுறையினர் ஆழமாகத் தெரிந்து கொள்வது அவசியமாகும். அதற்கு இதுபோன்ற போட்டிகள் ஒரு சிறந்த தளமாக அமையும். எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, பெருமளவில் இப்போட்டிகளில் பங்கேற்றுத் தங்களது திறமைகளை நிரூபிப்பதோடு, பயன்பெற வேண்டும்" என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தனது செய்திக்குறிப்பில் அன்போடு கேட்டுக் கொண்டுள்ளார். போட்டிக்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் பள்ளித் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.