மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா அலுவலக வளாகத்தின் முன்பு, குப்பைக் குவியலுக்கு நடுவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் கொட்டப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு ஆவணங்கள் இவ்வாறு அலட்சியமாக வீசப்பட்டிருப்பது குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.

Continues below advertisement

மறைவிடத்திற்கு சென்றபோது வெளிச்சத்திற்கு வந்த அவலம்

சீர்காழி தாலுகா அலுவலகத்திற்கு நாள்தோறும் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி மற்றும் சாதிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு சேவைகளைப் பெறுவதற்காக சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வழக்கம்போல் இன்றும் தாலுகா அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்க வந்திருந்தனர்.

அலுவலக வளாகத்தில் போதிய கழிப்பிட வசதிகள் இல்லாததன் காரணமாக, அங்கு வந்த பொதுமக்களில் சிலர் அலுவலகத்தின் முன்புறம் உள்ள ஒரு மறைவான பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு தேங்கிக் கிடந்த குப்பைக் குவியல்களுக்கு இடையே பிளாஸ்டிக் கவர்களில் கட்டப்பட்ட நிலையிலும், சிதறிய நிலையிலும் குவியல் குவியலாக ஏதோ கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உற்று நோக்கியபோது, அவை அனைத்தும் அச்சு மாறாத, புத்தம் புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் (Voter ID) என்பது தெரியவந்தது.

Continues below advertisement

சொந்தக் குடும்பத்தினரின் அட்டைகளைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி

இந்தத் தகவல் காட்டுத்தீ போல தாலுகா அலுவலக வளாகத்தில் பரவியதை அடுத்து, அங்கு நின்றிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குப்பைக் குவியலை நோக்கி விரைந்தனர். குப்பையில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகளை எடுத்து அவர்கள் ஒவ்வொன்றாகப் பார்த்தபோது, மேலும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் அரங்கேறின.

அலுவலகத்திற்குத் தங்களது பணிகளுக்காக வந்திருந்த சில பொதுமக்களின் சொந்தக் குடும்ப உறுப்பினர்களான மனைவி, மகன் மற்றும் மகள்களின் புதிய வாக்காளர் அடையாள அட்டைகளே அந்த குப்பைக் குவியலில் கிடந்துள்ளன. தங்களது அடையாள அட்டைகளைத் தேடி அலைந்த மக்கள், அவை குப்பையில் கிடப்பதைக் கண்டு ஆத்திரமும், வேதனையும் அடைந்தனர்.

மக்களின் குமுறல்: "ஆண்டுக் கணக்கில் காத்திருந்தோம்!"

இதுகுறித்து குப்பையில் இருந்து தனது மகனின் வாக்காளர் அடையாள அட்டையை மீட்டெடுத்த பகுதிவாசி ஒருவர் வேதனையுடன் கூறியதாவது: "தேர்தலில் வாக்களிப்பதற்காகவும், ஒரு முக்கியமான அரசு அடையாள ஆவணமாகப் பயன்படுத்துவதற்காகவும் நாங்கள் உரிய முறையில் விண்ணப்பம் செய்திருந்தோம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு, மாதங்கள் பல கடந்தும் எங்களுக்கு அடையாள அட்டை கைக்கு வந்து சேரவில்லை. தாலுகா அலுவலகத்திற்கும், தேர்தல் பிரிவுக்கும் பலமுறை அலைந்து திரிந்து கேட்டுப் பார்த்தும் 'இன்னும் வரவில்லை' என்றே அலட்சியமான பதில்கள் கூறப்பட்டன. ஆனால், இன்று எங்களது முகவரிகளுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய ஆயிரக்கணக்கான புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள், தாலுகா அலுவலகத்தின் மூக்கிற்கு நேரே குப்பையில் கொட்டப்பட்டுக் கிடப்பது எங்களை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. அரசுப் பணமும், மக்களின் உழைப்பும் இவ்வாறு வீணடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது." என்று அவர் தெரிவித்தார்.

துறை ரீதியான நடவடிக்கைக்குக் கோரிக்கை

இந்தியக் குடிமகனின் மிக முக்கியமான ஜனநாயக உரிமையாகவும், முதன்மை அடையாளச் சான்றாகவும் கருதப்படும் வாக்காளர் அடையாள அட்டைகள், இவ்வளவு பொறுப்பற்ற முறையில் குப்பையில் வீசப்பட்டிருப்பது தாலுகா அலுவலக ஊழியர்களின் அப்பட்டமான அலட்சியத்தைக் காட்டுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலமாகவோ விநியோகம் செய்யப்பட வேண்டிய இந்த அட்டைகளை, உரியவர்களிடம் சேர்க்காமல் குப்பையில் கொட்டிய ஊழியர்கள் அல்லது அதிகாரிகள் யார் என்பதை மாவட்ட நிர்வாகம் உடனடியாகக் கண்டறிய வேண்டும்.

இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலர்களும் உடனடியாகத் தலையிட்டு, தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த அத்துமீறலுக்குக் காரணமான அரசுப் பணியாளர்கள் மீது கடுமையான துறை ரீதியான மற்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சீர்காழி பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் மாவட்ட அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.