வேரோடு வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள் - வாழ்விடம் இழந்து தவிக்கும் குரங்குகள்; சீர்காழி அருகே பரிதாபம்..

சீர்காழி அடுத்த சூரக்காடு பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக வேரோடு வெட்டி அகற்றப்படும் நூற்றாண்டு கடந்த மரங்களில் காலம் காலமாக வாழ்ந்த குரங்குகள் வாழ்விடம் இழந்து தவித்து வருகின்றனர்.

Continues below advertisement

சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக வேரோடு வெட்டி அகற்றப்படும் நூற்றாண்டு கடந்த புளிய மரங்களில் காலம் காலமாக வாழ்ந்து வந்த குரங்குகள், தற்போது வாழ்விடம் இழந்து பரிதவித்து வருகின்றனர்.

Continues below advertisement

விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை 

விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையிலான 194 கிலோமீட்டர் தூரம் நெடுஞ்சாலையை (45 ஏ), நான்கு வழிச்சாலையாக மாற்ற 6,431 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதில், விழுப்புரம் (ஜானகிபுரம்) - எம்.என்.குப்பம்; மங்கலம் முதல் கடலுார் குடிகாடு சிப்காட் - சிதம்பரம்; சீர்காழி சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் வரை என நான்கு பகுதிகளாக பிரித்து, 4 ஒப்பந்ததாரர்கள் மூலம் பணி நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலை ஜானகிபுரம் கூட்ரோட்டில் துவங்கி வளவனுார் விவசாய நிலங்கள் வழியாக 16 கிலோமீட்டர் புறவழிச் சாலையாக கெங்கராம்பாளையத்தை அடைகிறது. அங்கிருந்து மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில், கண்டமங்கலம், அரியூர், எம்.என்.குப்பம் வரை 45 மீட்டர் அகல சிமென்ட் சாலைகளாக மாற்றப்படுகிறது.


எம்.என்.குப்பத்தில் இருந்து விவசாய நிலம் வழியாக கடலுார் மாவட்டம் செல்கிறது. இதில், மதகடிப்பட்டு, திருவண்டார்கோவில், திருபுவனை, கண்டமங்கலம், அரியூர், எம்.என்.குப்பத்தில் மேம்பாலம் அமைகிறது. கண்டமங்கலத்தை தவிர்த்த மற்ற இடங்களில் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளது.

எம்.என்.குப்பத்தில் இருந்து தெற்கு நோக்கி பிரிந்து செல்லும் நான்கு வழிச்சாலை, மங்கலம், உறுவையாறு, கோர்க்காடு, பரிக்கல்பட்டு, குருவிநத்தம், அரங்கனுார், சேலியமேடு, பாகூர் வழியாக, கடலுார் வடபுறம் கீழ்பாதியை அடைக்கிறது. அங்கிருந்து, உடலப்பட்டு, புதுக்கடை, இளஞ்சிப்பட்டு, நத்தப்பட்டு, கோண்டூர், பாதிரிக்குப்பம், குமாரப்பேட்டை, திருவந்திபுரம், ராமாபுரம் வழியாக, 33.6 கி.மீ., துாரம் கடந்து, கடலுார்-சிதம்பரம் சாலையில் கடலுார் சிப்காட் குடிகாடு அருகே இணைகிறது.


இந்த பாதையில் கெடிலம் ஆறு, தென்பெண்ணை ஆற்றில் இரண்டு மெகா பாலங்கள் அமைக்கப்படுகிறது. கடலுார் சிப்காட்டில் இருந்து சிதம்பரம் வரை பழைய சாலையை அகற்றி புதிய சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது. சிதம்பரம் புறவழிச்சாலை துவங்கி, கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலத்துடன் புறவழிச்சாலை அமைகிறது.சீர்காழி சட்டநாதபுரத்தில் இருந்து ஆக்கூர், திருக்கடையூர், பொறையார் வழியாக காரைக்காலுக்கு வெளியே புறவழிச் சாலையாக கடந்து, நாகப்பட்டினத்தை அடைகிறது. 


விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையிலான 4 பேட்ஜ் பணியில், சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் இடையிலான பணிகள் கடந்த 2020 ஜனவரி மாதம் துவங்கியது. பிரதமர் நரேந்திரமோடி இந்த பகுதி சாலை பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இப்பணிகளை கடந்த 2022 அக்டோபர் மாதத்துடன் முடிக்க காலக்கெடு வழங்கப்பட்டது. நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பல பிரச்னையால் இப்பணியில் 15 சதவீதம் மட்டுமே தற்போது முடிந்துள்ளது. நிர்வாக சிக்கல்கள் முடிந்து, தற்போது பணிகள் துவங்கி நடந்து வருகிறது.


வெட்டப்பட்ட மரங்கள் 

இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் பூம்புகார் மற்றும் நாகப்பட்டினம் செல்லும் பிரிவு சாலைகள் அமைந்துள்ளது. இச்சாலையின் இருபுறமும் நூற்றாண்டுகளைக் கடந்த புளிய மரங்கள் அடந்திருந்தன. இந்த மரங்களில் காலம் காலமாக நூற்றுக்கணக்கான குரங்குகள் கூட்டம் கூட்டமாக வசித்து வந்தன.

விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை பணிக்காக சூரக்காட்டில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் இருந்த புளிய மரங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெட்டி அகற்றப்பட்டது. 


பரிதவிக்கும் குரங்குகள்

இதனை அடுத்து அப்பகுதி மரங்களில் வசித்த குரங்குகள் பூம்புகார் சாலையில் உள்ள புளிய மரங்களில் தஞ்சம் அடைந்து வசித்து வந்தது. இந்நிலையில் தற்போது பூம்புகார் சாலையையும் அகலப்படுத்தும் பணிகள் கடந்த சில தினங்களாக தொடங்கப்பட்டுள்ளது.

இப்பணிக்காக சாலையின் இருபுறமும் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த புளிய மரம் உள்ளிட்ட அனைத்து மரங்களும் வேரோடு வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. இதனால் காலம் காலமாக தங்கள் வசித்து வந்த வாழ்விடங்களை இழந்த குரங்குகள் சாலையோரம் தவித்து வருகிறது. 


மேலும் அப்பகுதியில் இருந்து வெளியேறி அருகே உள்ள குடியிருப்புகளிலும் சில குரங்குகள் தஞ்சம் அடைந்துள்ளன. குரங்குகளால் மனிதர்களுக்கும் அதே போல் மனிதர்களால் குரங்குகளும் இடையூறு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே வாழ்விடம் இழந்து தவிக்கும் குரங்குகளை பாதுகாப்பாக பிடித்து வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continues below advertisement