மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, விசாரணை என்ற பெயரில் 17 வயது ஐ.டி.ஐ மாணவரை லத்தி மற்றும் பூட்ஸ் கால்களால் காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த மாணவர் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கோயில் திருவிழாவில் நடந்த சம்பவம்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கீழகனி கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் உள்ளூரில் உள்ள தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த 13-ஆம் தேதி இரவு, சீர்காழியில் நடைபெற்ற உள்ளூர் கோயில் திருவிழாவிற்குச் சென்றுவிட்டு, தனது நண்பர்களுடன் ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேராக வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, வழியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரைக் கண்டதும், ஒரே வாகனத்தில் மூவர் செல்வதால் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிப்பார்கள் என்ற பயத்தில், உடன் வந்த நண்பர்கள் இருசக்கர வாகனத்தைக் கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். எனினும், அந்த ஐ.டி.ஐ மாணவர் அச்சமடைந்து ஓடாமல் அங்கேயே நின்றுள்ளார்.

Continues below advertisement

கொடூரத் தாக்குதல் மற்றும் மிரட்டல்

அங்கு வந்த காவல்துறையினர், மாணவரைப் பிடித்துக் காரணம் கேட்காமல் லத்தியாலும் பூட்ஸ் கால்களாலும் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அப்பகுதியில் நடைபெற்ற நகை திருட்டுச் சம்பவம் ஒன்றை மாணவர் மீது வலுக்கட்டாயமாகச் சுமத்த முயன்று, அதை ஒப்புக்கொள்ளச் சொல்லி வீடியோ பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விசாரணையின் இறுதியில் அவர் 17 வயது சிறுவன் (மைனர்) என்பது தெரியவந்ததையடுத்து, காவல்துறையினர் அவரை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், நடந்த இச்சம்பவம் குறித்து வெளியே யாருடமாவது கூறினால், பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துவிடுவோம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதி

வீட்டிற்கு வந்த மாணவர் அச்சம் காரணமாக ஆரம்பத்தில் வீட்டில் எதுவும் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி அவருக்கு திடீரென கடுமையான தலைவலியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. மேலும் தலையின் பின்புறம் பலத்த வீக்கம் இருப்பதைக் கண்ட அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு உள்நோயாளியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு

இச்சம்பவம் குறித்து சிறுவனின் உறவினர்கள் உடனடியாக சிறார் உதவி மையத்தில் (Childline) முறையீடு செய்தனர். அதனைத் தொடர்ந்து, சிறுவனின் சகோதரி அஞ்சலி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தார்.

புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சிறுவனின் சகோதரி அஞ்சலி, "என் தம்பி எந்தத் தவறும் செய்யவில்லை. பயத்தில் நின்று கொண்டிருந்தவனைப் பிடித்து மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வெளியில் கூறியதால், காவல்துறையினர் தொடர்ந்து எங்கள் வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, என் தம்பியைத் தாக்கிய காவலர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் கண்ணீருடன் தெரிவித்தார்.

சிறார் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமை ஆர்வலர்களும், உள்ளூர் பொதுமக்களும் இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.