மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் பட்டியலின (SC) மற்றும் பழங்குடியின (ST) மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் எளிதில் சென்றடைவதை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, தகுதியுடைய நபர்களைப் பல்வேறு அரசு நலவாரியங்களில் உறுப்பினர்களாகப் பதிவு செய்வதற்கும், அதற்குத் தேவையான அடிப்படைச் சான்றிதழ்களைப் பெற்றுத் தருவதற்கும் ஏதுவாக மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்,  தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

எந்தெந்த நலவாரியங்களில் பதிவு செய்யலாம்?

இம்முகாம்களில் தகுதியான பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பின்வரும் முக்கிய நலவாரியங்களில் புதிய பதிவுகள் மற்றும் புதுப்பித்தல்கள் மேற்கொள்ளப்படும்.

* தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம்* தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம்* தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம்* தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியம்

Continues below advertisement

இந்த வாரியங்களில் உறுப்பினர்களாக இணைவதன் மூலம் கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி, இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணத்திற்கான நிவாரணத் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களை எவ்விதத் தடையுமின்றி நேரடியாகப் பெற முடியும்.

முகாம்கள் நடைபெறும் நாட்கள் மற்றும் இடங்கள் (அட்டவணை)

பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள முகாம்களை அறிந்து எளிதில் பங்கேற்கும் வகையில், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் (BDO Offices) காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை இச்சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. அதன் முழு விவரம் பின்வருமாறு:

18.07.2025 - செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகம், காலை 09:00 - மாலை 05:00 

25.07.2026 - கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலகம்  காலை 09:00 - மாலை 05:00 

01.08.2026 - மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலகம், காலை 09:00 - மாலை 05:00 

08.08.2026 - குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகம், காலை 09:00 - மாலை 05:00 

16.08.2026 - சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலகம், காலை 09:00 - மாலை 05:00 

1. சாதிச் சான்றிதழ் (Community Certificate)2. வருமானச் சான்றிதழ் (Income Certificate)3. குடும்ப அட்டை / ரேஷன் கார்டு (Ration Card)4. நலவாரிய அட்டை (ஏற்கனவே பதிவு செய்திருந்தால்)5. ஆதார் அட்டை (Aadhaar Card) 

விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் போன்றவற்றை வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் அதே இடத்தில் விரைந்து பரிசீலனை செய்து வழங்குவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியரின் முக்கிய வேண்டுகோள்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், விடுத்துள்ள செய்திக்குறிப்பில்; "அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் நலவாரிய உதவிகள் அனைத்தும் அடித்தட்டு மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதே இந்த சிறப்பு முகாம்களின் நோக்கமாகும். மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுடைய பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் பகுதிக்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் முகாம்களில்  பங்கேற்று, பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த முகாம்கள் தங்கு தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் திரளாக வந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.