மயிலாடுதுறை நகரில் உள்ள முக்கியப் போக்குவரத்துப் பாலமான சாரங்கபாணி நினைவு ரயில்வே மேம்பாலத்தில் சாலை மேற்பரப்பு சீரமைப்புப் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. இதனால் இன்று முதல் சுமார் மூன்று மாதங்களுக்கு மேம்பாலப் போக்குவரத்து முழுவதுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாற்றுப்பாதையாக அறிவிக்கப்பட்ட மாப்படுகை ரயில்வே கேட் பகுதியில் இன்று காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Continues below advertisement

சாரங்கபாணி நினைவு ரயில்வே மேம்பாலம் 

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் பிரதான சாலையான காவேரிநகர் பகுதியில் ரயில்வே சந்திப்பு அமைந்துள்ளது. கடந்த 1975-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மேம்பாலம் அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் திறக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த மேம்பாலம் போக்குவரத்துக்கு பயன்பாட்டில் உள்ளது. தற்போது இந்த பாலத்தின் மேல் வடக்கு பகுதியில் கைப்பிடி சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் மேம்பாலத்தின் மீது கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகளால் கைப்பிடி சுவரின் விரிசல்கள் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. இதனால் எந்த நேரத்திலும் இந்த கைப்பிடி சுவர் இடிந்து கீழே விழும் அபாயமும் நிலவியது. 

Continues below advertisement

உயிர்பலி தடுக்கப்படுமா?

இதனால் அந்த வழியாக செல்பவர்கள், வாகன ஓட்டிகளுக்கு உயிர்பலி ஏற்படும் நிலை ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் உயிர்பலி ஏற்படும் முன்பு மயிலாடுதுறையில் பழுதடைந்த ரெயில்வே மேம்பால கைப்பிடி சுவரை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

50 ஆண்டு கால பாலத்தில் சீரமைப்புப் பணி

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் சாரங்கபாணி நினைவு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் கும்பகோணம் செல்லும் வாகனங்களுக்கும், மாப்படுகை ரயில்வே கேட் பகுதியில் உள்ள கல்லணை சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மேம்பாலம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது மேம்பாலத்தின் மேல்தளப் பராமரிப்புப் பணிகள் இன்று முதல் (அக்டோபர் 3) தொடங்கவுள்ளன. 

இதனால் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில், இன்று முதல் அடுத்த மூன்று மாதங்களுக்குப் போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் மார்க்கமாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையாக மாப்படுகை ரயில்வே கேட் சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரயில்வே கேட் அடைப்பால் மக்கள் அவதி

இந்தத் தடையால், தஞ்சாவூர் , கும்பகோணம் மட்டுமின்றி சிதம்பரம், பூம்புகார், திருவாரூர் போன்ற மார்க்கங்களுக்கும் செல்லும் அனைத்து வாகனங்களும் மாப்படுகை ரயில்வே கேட் வழியாகச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாப்படுகை ரயில்வே கேட் வழியாக மயிலாடுதுறை - விழுப்புரம் மார்க்கமாகச் செல்லும் ரயில் போக்குவரத்து உள்ளது. இதைத் தவிர, ரயில் ஜங்ஷனில் ரயில் இன்ஜின் மாற்றுவதற்கான பாதை இந்த கேட் பகுதி வரை நீடிப்பதால், தினமும் சராசரியாக 20 க்கும் மேற்பட்ட முறை ரயில் இன்ஜின் மாற்றுவதற்காக இந்த கேட் மூடப்படுவது வழக்கம்.

பல கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

இன்று மேம்பாலம் மூடப்பட்ட நிலையில், அனைத்து வாகனப் போக்குவரத்தும் மாப்படுகை ரயில்வே கேட் பகுதிக்குத் திருப்பப்பட்டதால், நிலைமை மேலும் மோசமடைந்தது. ரயில் இன்ஜின் மாற்றுவதற்காக கேட் அடிக்கடி மூடப்படுவதால், இரண்டு பக்க சாலைகளிலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. பேருந்துகள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து விதமான போக்குவரத்துகளும் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த நேரத்திற்குச் செல்ல முடியாமல் பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், வணிகப் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, சரக்கு வாகனங்கள் அதிகாலையிலேயே போக்குவரத்து நெரிசலில் சிக்கி, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தீபாவளி பண்டிகைக்குப் பின் பணிகளைத் தொடங்க கோரிக்கை

பொதுமக்களின் தற்போதைய அவல நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்கள் இரண்டு முக்கியக் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் முன்வைத்துள்ளனர்.

*தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், பண்டிகைக் காலப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்தைக் கருத்தில் கொண்டு, தற்போதைய மேம்பாலப் பராமரிப்புப் பணிகளை தீபாவளி பண்டிகைக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டும்.

*மாப்படுகை ரயில்வே கேட் பகுதியில் ரயில் இன்ஜின் மாற்றும் பணிகளுக்காக கேட் மூடி திறக்கப்படும் நேரத்தை (சிக்னல் நேரம்) ரயில்வே அதிகாரிகள் உடனடியாகக் குறைத்து, போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உரிய அனுமதி வழங்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்தக் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தீர்வு காணாவிடில், அடுத்த மூன்று மாதங்களுக்குப் பொதுமக்கள் அன்றாட வாழ்வில் பெரும் சவால்களைச் சந்திக்க சூழல் ஏற்பட்டுள்ளது.