தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை சேர்ந்த திமுக பிரமுகர் இமயமலையில் உள்ள முருகன் கோயில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் செய்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் தனது 47-வது பிறந்தநாள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது 47-வது பிறந்தநாள் நேற்றை தினம் திமுகவினரால் கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் அடுத்து பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், கூட்டணிக் கட்சி தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது 47-வது பிறந்த நாளை நேற்றை தினம் கொண்டாடினார். முன்னதாக தந்தை மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலினிடமும் வாழ்த்துகளை பெற்றார். அப்போது முதல்வர் ஸ்டாலின் அவருக்கு முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரை வந்த உதயநிதி, அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். அப்போது, நினைவிட பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதுடன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியிடமும் வாழ்த்து பெற்றார்.
க.அன்பழகனின் உருவப்படத்துக்கு மரியாதை
பின்னர், கீழ்ப்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் க.அன்பழகன் இல்லத்துக்குச் சென்று அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வுகளில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராஜகண்ணப்பன், கோவி.செழியன், மு.பெ.சாமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோபாலபுரம் கருணாநிதி இல்லத்தில் மரியாதை
தொடர்ந்து, கோபாலபுரம் கருணாநிதி இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தியதுடன், தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். அதன்பின், அத்தை செல்வியையும் சிஐடி நகர் இல்லத்தில் ராசாத்தி அம்மாளையும் சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக, துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது இல்லத்தில், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர் அன்பில் மகேஸ், தலைமைச் செயலர் நா.முருகானந்தம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
சிஐடி நகரில் இருந்து முகாம் அலுவலகம் வந்த உதயநிதிக்கு, இளைஞரணி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், துரைமுருகன், பொன்முடி, செந்தில் பாலாஜி, கீதாஜீவன், தா.மோ.அன்பரசன், சிவசங்கர், மதிவேந்தன், எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். அரவிந்த் ரமேஷ், வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இவர்கள் தவிர ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள், இளைஞரணியினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து
இதேபோல் விசிக தலைவர் திருமாவளவன், எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ ஆகியோரும் வாழ்த்து கூறினர். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், ‘தமிழக அரசியலின் இளமைக் குரலாய் திகழும் துணை முதல்வர், உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மென்மேலும் பல சாதனைகள் படைத்து மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்க வாழ்த்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
இமயமலையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறை மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் இமயமலையில் சிறப்பு பூஜைகள் செய்து அங்குள்ள சாதுக்கள், ஏழை மக்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் வழங்கியுள்ளார். இமயமலையில் உள்ள உலகின் மிக உயரமான கார்த்திகேயே முருகன் கோயிலில் மயிலாடுதுறை மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞரும், திமுக பிரமுகருமான ராம.சேயோன் சிறப்பு வழிபாடு நடத்தி, அங்குள்ள சாதுக்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் வழங்கி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.