சீர்காழி: பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனின் நம்பிக்கைக்குரிய மேலாளராகப் பணியாற்றி வந்த நபர், தனது காதலியுடன் சேர்ந்து ரூ.42.5 லட்சத்தை நூதன முறையில் கொள்ளையடித்து, மயக்கம் வந்தது போல் நாடகமாடிய சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடித் திட்டத்தை உடைத்தெறிந்த சீர்காழி காவல்துறையினர், மேலாளர் மற்றும் அவரது காதலியை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Continues below advertisement

பின்னணி என்ன?

மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் சேஷாத்தலை செட்டி தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 32). இவர் பூம்புகார் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேலாளராகப் பணியாற்றி வந்தார். நீண்ட காலமாகப் பணியாற்றி வந்ததால், எம்.எல்.ஏ.வின் குடும்பத்தினரிடம் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றவராக சிவக்குமார் விளங்கியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி நிவேதா முருகன் எம்.எல்.ஏ.வின் மனைவி லெட்சுமி, சீர்காழியில் வசித்து வரும் தனது மகளிடம் கொடுப்பதற்காக ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை மேலாளர் சிவக்குமாரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். வழக்கம்போல் நம்பிக்கையுடன் பணத்தைப் பெற்றுக்கொண்ட சிவக்குமார், தனது இருசக்கர வாகனத்தில் சீர்காழி நோக்கிப் புறப்பட்டுள்ளார்.

Continues below advertisement

மயக்க நாடகமும் மர்மக் கதையும்

சீர்காழி செங்கமேடு புறவழிச்சாலை மேம்பாலம் பகுதியில் சிவக்குமார் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு மயக்கம் தெளிந்து பார்த்தபோது, தன்னிடம் இருந்த ரூ.42.5 லட்சம் அடங்கிய பணப்பை காணாமல் போயிருந்ததாக அவர் எம்.எல்.ஏ.வின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், பதற்றத்தில் தனக்கு மீண்டும் மயக்கம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி, சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டார். பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதாக சிவக்குமார் கூறிய கதையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ.வின் மகன் நிக்கேஷ் (26), உடனடியாக சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிசிடிவி காட்சிகளால் உடைந்த திரைக்கதை

எதிர்கட்சி எம்.எல்.ஏ.வின் வீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளை போனதாகப் புகார் எழுந்ததால், காவல்துறை உடனடியாக களத்தில் குதித்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், சீர்காழி டி.எஸ்.பி. சரவணன், இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் சம்பவம் நடந்த செங்கமேடு புறவழிச்சாலை பகுதியில் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

முதற்கட்டமாக, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் (CCTV) பதிவுகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சிவக்குமார் குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பகுதியில் மர்ம நபர்கள் எவரும் அவரைப் பின்தொடரவில்லை என்பதும், மாறாக ஒரு பெண் அங்கு வந்து சிவக்குமாரிடம் இருந்து ஒரு பையைப் பெற்றுச் செல்வதும் சிசிடிவி காட்சிகளில் தெளிவாகப் பதிவாகியிருந்தது.

கிடுக்கிப்பிடி விசாரணையில் வெளிவந்த உண்மை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவக்குமாரிடம் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து காவல்துறையினர் தங்களது பாணியில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, சிவக்குமார் குற்றத்தை ஒப்புக்கொண்டு, தான் ஆடிய பகீர் நாடகத்தை வாக்குமூலமாக அளித்தார். காவல்துறை விசாரணையில் சிவக்குமார் அளித்த வாக்குமூலத்தில் "எம்.எல்.ஏ.வின் வீட்டில் இவ்வளவு பெரிய தொகை கைக்கு வந்ததும் எனது பேராசை தூண்டியது.

இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டேன். இதற்காக பொறையார் பகுதியைச் சேர்ந்த எனது காதலி கவிதாவை செல்போன் மூலம் தொடர்புகொண்டு, சீர்காழி புறவழிச் சாலை பணமங்கலம் பகுதிக்கு வருமாறு கூறினேன்.

அவர் திட்டமிட்டபடி அங்கு வந்ததும், யாரிடமும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகப் பணப்பையை அவரிடம் கொடுத்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தேன். பின்னர், பணம் கொள்ளை போனதாக நம்ப வைக்கவே, எனக்கு மயக்கம் வந்துவிட்டது போலச் சாலையில் விழுந்து நாடகமாடினேன். என சிவக்குமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

காதலி கைது: பணமும் மீட்பு

சிவக்குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில், பொறையார் பகுதியில் மறைந்திருந்த அவரது காதலி கவிதாவை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். உடனடியாக போலீசார் கவிதா வீட்டில் புதைத்து வைத்திருந்த ரூபாய் 35 லட்சத்தை பணத்தை பறிமுதல் செய்து சிவக்குமார் மற்றும் கவிதா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் 44 லட்சத்தில் 35 லட்சம் மட்டுமே வீட்டி இருந்துள்ளது கவிதா பீரோ மற்றும் 5 சவரன் தங்க நகைகள் வாங்கியும் அதனை தொடர் பணத்தை வட்டிக்கு விடும் தொழிலை தொடங்கி தொழிலதிபராக தனது உல்லாச வாழ்கை தொடங்கிய நேரத்தில் போலீசாரிடம் சிக்கியுள்ளார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சீர்காழி போலீசார் 35 லட்சம் பணம், சிவக்குமார் மற்றும் கவிதா பயன்படுத்திய இரண்டு ஸ்கூட்டியை பறிமுதல் செய்தனர்.

நம்பிக்க துரோகம் மற்றும் மோசடி செய்த குற்றத்திற்காக மேலாளர் சிவக்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது காதலி ஆகிய இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த சீர்காழி போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

10 ஆண்டுகள் நம்பிக்கையாக இருந்த மேலாளரே, காதலியுடன் சேர்ந்து எம்.எல்.ஏ.வின் பணத்தைச் சுருட்ட சினிமா பாணியில் மயக்க நாடகமாடிய சம்பவம் டெல்டா மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், புகாரளித்த சில மணி நேரங்களிலேயே துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்த சீர்காழி போலீசாரைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.